பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ் , பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டணியாகும். வங்காள விரிகுடாவை ஒட்டிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

உறுப்பு நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் பிராந்தியத்தில் பொது சுகாதாரத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இலவச சுகாதார சேவைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய செயலாளர் நாயகம், பிம்ஸ்டெக் பிராந்தியத்திற்குள் சுகாதாரத் துறையில் இலங்கை முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பிம்ஸ்டெக் அமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், பிம்ஸ்டெக் நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டங்கள் சிலவற்றை நடத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினூக் கொழும்பகேயும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.