மோசடி பேர்வழி, மைக் ஸ்விட்ச் ஆப், மோடி வந்தே ஆகணும்… மாநிலங்களவையில் கடும் அமளி!

தேசிய அளவில் மணிப்பூர் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூர் விவகாரம்

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவாக பேச வேண்டும். அதன்பின்னர் அனைத்து கட்சிகளும் விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி பேசுவதற்கான சூழல் இதுவரை ஏற்படவில்லை. அதேசமயம் விவாதிக்க தயாராக இருப்பதாக ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கடும் அமளி

இதனை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து வருகின்றனர். இன்றைய தினம் மாநிலங்களவையில் நடந்த அமளி பேசுபொருளாக மாறியுள்ளது. மோசடி எம்.பிக்கள் என்று பாஜகவினரை பார்த்து எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதைக் கண்டதில் பாஜக தரப்பு கோபமடைந்தது.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொந்தளிப்பு

உடனடியாக எழுந்து பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மோசடி பேர்வழிகள் என்று பேசியதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உடன்படவில்லை. மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது மைக் ஸ்விட்ச் ஆப் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மோடி மோடி என கோஷம்

அப்படி எதுவும் இல்லை என்று அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் விளக்கம் அளித்தார். இதற்கிடையில் தொடர்ந்து கூச்சல் எழுப்பி வந்தனர். அனைவரையும் சமாதானப்படுத்த அவைத் தலைவர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கடைசியில் மோடி, மோடி என்று எதிர்க்கட்சிகள் கோஷமிடத் தொடங்கினர்.

அவை ஒத்திவைப்பு

கூடவே தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களும் மோடி, மோடி என்று கோஷமிட அவை களேபரமானது. இந்த சூழலில் அவையை 12 மணி வரை ஒத்திவைத்து ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார். அவை மீண்டும் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

மறுபுறம் மக்களவையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. ஆளும் பாஜக அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளிக்கப்பட்டது. இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பான விவாதம் பின்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பேசியே ஆக வேண்டும்

அப்போது பிரதமர் மோடி பேச வேண்டிய கட்டாயம் வரும். ஏனெனில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் போது ஒவ்வொரு கட்சியாக பேச அனுமதிக்கப்படுவர். இதையடுத்து ஆளும் கூட்டணி கட்சிகள் பேசும். இறுதியில் பிரதமர் பேசுவார். அதுதான் நடைமுறை. இதை கணக்கு போட்டு தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.