சென்னை: கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக வெளியான திரைப்படம் இந்தியன்.
1996ல் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்தியன் 2ம் பாகத்திலும் கமல்ஹாசன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியன் படத்தின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதியது தான் என தற்போது தெரியவந்துள்ளது.
ரஜினிக்குப் பதிலாக கமல்ஹாசன்: ஜென்டில்மேன் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். அர்ஜுன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் கமல் அல்லது சரத்குமார் தான் முதலில் நடிக்கவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுடன் இணைய வேண்டும் என்ற ஷங்கரின் கனவு, இந்தியன் படத்தில் நனவானது. 1996ல் வெளியான இந்தியன் கமல்ஹாசன் கேரியரில் தனித்துவமான இடம் பிடித்தது.
இந்தியன் தாத்தா கேரக்டரும் அதற்காக கமல் தனது கெட்டப்பை முழுவதுமாக மாற்றியதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியன் தாத்தா கேரக்டருக்காக மேக்கப் போட கமல் பல மணி நேரங்கள் வரை பொறுமை காத்துள்ளார். இந்தியன் படத்துக்கு கிடைத்த வெற்றியால் தான் தற்போது அதன் 2ம் பாகத்திலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடித்துள்ளார்.
முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2, சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தான் நடிக்க வைக்க முயற்சித்துள்ளாராம் இயக்குநர் ஷங்கர். அவருக்காக இந்தியன் கதையையும் எழுதியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக ரஜினி இந்தியன் படத்திற்கு ஓக்கே சொல்லவில்லையாம்.
அதன்பிறகே கமல்ஹாசனிடம் இந்தியன் கதையை சொல்லி, அவரிடம் கால்ஷீட் வாங்கியுள்ளார். ரஜினிக்காக எழுதியதால் இந்தியன் படத்தில் பல காட்சிகளை செம்ம ஸ்டைலிஷாக எடுக்கவும் ஷங்கர் பிளான் செய்திருந்தாராம். அப்படியொரு காட்சியில் கமல் ரஜினி ஸ்டைலில் இல்லாமல், அவரது சொந்த ஸ்டைலில் நடித்து ஷங்கரை மிரள வைத்துள்ளார்.
அதாவது சேனாதிபதியான கமல்ஹாசனை அரெஸ்ட் செய்வதற்காக நெடுமுடி வேணு தனியாக செல்வார். அப்போது ஈஸி செயரில் உட்காந்திருக்கும் கமல், எதிரில் அமர்ந்திருக்கும் நெடுமுடி வேணுவை அடித்து துவம்சம் செய்வார். இருவருமே வயதான கெட்டப்பில் மோதும் இந்த சண்டைக் காட்சி செம்ம மாஸ்ஸாக உருவாகியிருந்தது. இந்த சீனில் நெற்றியில் விழும் தனது முடியை ஸ்டைலாக விளக்கிவிடுவார். பின்னர் கீழே விழுந்த துண்டை எடுத்து தனது தோளில் போடுவார் கமல்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை மனதில் வைத்து இக்காட்சியை கமலிடம் விளக்கியுள்ளார் ஷங்கர். ஆனால், கமல்ஹாசன் ரஜினியை இமிடேட் செய்யாமல், அவரது ஸ்டைலில் முடியை நெற்றியில் இருந்து விளக்கியதோடு, கீழே விழுந்த துண்டையும் தனது தோளில் போட்டு மாஸ் காட்டியுள்ளார்.