கேரளா போலீஸ் ஸ்டேசனில் கோழிக்கறி சமையல்.. ரசித்து ருசித்து ஊட்டி விட்ட காவலர்கள்.. ஐஜி நோட்டீஸ்

பத்தனம் திட்டா: கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் காவல் நிலையத்திற்குள் கோழிக்கறி கிரேவி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காவல் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை அடித்து உதைப்பது, காவலர்கள் கொடூரமாக தாக்குவது, சத்தம் போடுவது போன்ற விசயங்களைத்தான் சினிமாவிலும் நேரிலும் பார்த்திருப்பதார்கள். ஆனால் காக்கி யூனிபார்ம் போட்ட உடம்புக்குள் அருமையான நளபாக சக்கரவர்த்திகள் ஒளிந்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. சிக்கன் சமைத்து அதை ஆசையாக பரிமாறி ஊட்டி விடுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவில் உள்ள இலவம்திட்டா காவல்நிலையத்தில் காவலர்கள் யூனிபார்ம் அணிந்த நிலையில், போலீஸ் நிலையத்தில் சிக்கன் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு களி என செய்து ருசித்தனர். சிக்கன் கடைக்கு போய் கோழி வாங்குவது தொடங்கி, வெங்காயம் வெட்டுவது இஞ்சி பூண்டு உரிப்பது பின்னர் மசாலா போட்டு சமைப்பது வரை வீடியோ எடுக்கப்பட்டு சிறப்பாக எடிட் செய்யப்பட்டுள்ளது.

பின்னணி பாடலுடன் மரவள்ளிக்கிழங்கு களி மற்றும் சிக்கன் குழம்பு சமையல் வீடியோவை பகிர்ந்துள்ளனர். சாப்பாடு செய்தும், அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டனர். அதில் ஹைலைட் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டதுதான்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றுள்ளது.
சிலர் இந்த வீடியோவைப் பார்த்தவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று, அதை போலீஸ் அதிகாரி ஒருவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசுக்கு முழு ஸ்டேஷன் அதிகாரிகளும் பதில் அளிக்க வேண்டும் என்று கேரள தெற்கு மண்டல ஐ.ஜி. கேட்டுக் கொண்டுள்ளார். காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் போலீசார் எப்படி இந்த வேலையை செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கான காரணம் என்ன என்றும் கேட்கப்பட்டுள்ளது.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.