விளைநிலங்கள் அழிப்பு.. கொந்தளிக்கும் பாமக.. அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டம்

நெய்வேலி: என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இதனை ஏற்க பொதுமககள், விவசாயிகள் மறுத்து வந்தனர். இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணி நடைபெற்றது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டன. இதற்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நெய்வேலியில் இன்று என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. இது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது.

PMK Protest Against NLC Expansion in Neyveli

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன்.

கடலூர் மாவட்ட உழவர்களையும், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அனைத்து அமைப்புகளும், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.