இஸ்லாம், இந்து மதங்களுக்குள் நடக்கும் கலப்பு திருமணங்களுக்கு, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் `லவ் ஜிஹாத்’ எனப் பெயர் சூட்டி, இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதாக சமூகத்தில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது கூட, லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அஸ்ஸாம் காங்கிரஸின் மாநில தலைவர் பூபென் போரா, “மகாபாரதத்தில், காந்தாரியின் குடும்பம் திருதராஷ்டிரனுக்கு தங்களது மகளைத் திருமணம் செய்துவைக்க விரும்பவில்லை, பீஷ்மர் தான் கட்டாயப்படுத்தினார். அதேபோல், கிருஷ்ணர் ருக்மணியை திருமணம் செய்ய விரும்பியபோது, அர்ஜுனன் மாறுவேடத்தில் வந்தார். எனவே மகாபாரதத்திலும் கூட லவ் ஜிஹாத் இருக்கிறது” என்று கூறியிருப்பது பா.ஜ.க தரப்பில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “கிருஷ்ணர், ருக்மணி பற்றிய தலைப்பை இழுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சனாதன தர்மத்துக்கு எதிரானது. மனித குற்றங்களுடன் கடவுள்களை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. மேலும், ஒரு பெண் தவறான அடையாளத்தின் அடிப்படையில் திருமணம் செய்து, திருமணத்திற்குப் பிறகு அவள் மதம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் , அது லவ் ஜிஹாத். இங்கு கிருஷ்ணர் ருக்மணியை மதம் மாறச் சொல்லவே இல்லை.

எனவே இப்போது இது தொடர்பாக யாராவது வழக்குப் போட்டால், அதனைக் கூறியவரைக் கைதுசெய்ய வேண்டும். நான் எப்போதும் இந்து கடவுள்களை வணங்குகிறேன். ஆனால், நாளைக்கே என்னை நமாஸ் படிக்கச் சொன்னால், எனக்கு எப்படியிருக்கும்… திருமணம் செய்து கொண்டாலும் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றக்கூடாது. மேலும், இது சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி இருக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டங்களை நாம் பின்பற்றாமல் மீறப்படும்போது, அது லவ் ஜிஹாத்தாக மாறுகிறது. எனவே சட்டங்களை யாரும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.