சான்றிதழ் (தமிழ்)

அறிமுக இயக்குநர் JVR என்பவரின் இயக்கத்தில் மறைந்த நடிகர் மனோபாலா, சுமந்த், ராதா ரவி, ஆஷிகா அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சான்றிதழ்’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கருவறை என்ற கிராமத்தை சிறந்த கிராமமாக முன்னேற்ற கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் போராடுகின்றனர். நவீன வசதிகள், கட்டுப்பாடுகள் என பல வேலைகளை அதற்காகச் செய்கின்றனர். இதற்கிடையில் இதைத் தடுக்கப் பல அரசியல்வாதிகள் சதித்திட்டம் தீட்டுகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து ஊரில் இருக்கும் பிரச்னைகளையும் தீர்த்து கருவறை கிராமம் சிறந்த கிராமமாக முன்னேறியதா என்பதுதான் இதன் கதைக்களம்.
WEB (தமிழ்)

ஹாரூன் இயக்கத்தில் நட்டி, ஷில்பா மஞ்சுநாத், மொட்டை ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, ஷாஸ்வி பாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘WEB’. திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
போதைக்கு அடிமையான சில பெண்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். அவர்களைக் கதாநாயகன் நட்டி ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். அப்பெண்களும் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். கதாநாயகன் அப்பெண்களைக் கடத்துவதற்கான காரணம் என்ன, அவர்கள் அந்த வீட்டிலிருந்துத் தப்பினார்களா என்பதுதான் இதன் கதைக்களம்.
பிரியமுடன் ப்ரியா (தமிழ்)

ஏ.ஜே. சுஜித் இயக்கத்தில் அசோக்குமார், லீஷா, சுரேஷ், தலைவாசல் விஜய், ஜீவா, ஏ.வெங்கடேஷ், பேபி வேதிகா, பேபி மீரா, வைபவிஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரியமுடன் ப்ரியா’. காதல் க்ரைம் திரைப்படமான இது ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வலுக்கட்டாயமாகப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி அவர்களைக் கொல்லும் சீரியல் கில்லரின் பின்னணி என்ன என்பதை மையமாகக் கொண்ட கதைக்களம் இது.
சுப்ரமணியபுரம் (ரீ-ரிலீஸ்)

சசிக்குமார் இயக்கத்தில் ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, ஸ்வாதி உள்ளிட்டோர் நடிப்பில் ரத்தம் படிந்த காதல் கதையாக 2008ம் ஆண்டு வெளியாகி படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல வரவேற்பையும், பெயரையும் பெற்றுத் தந்தத் திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. அறிமுக இயக்குநராக சசிகுமார் முதல் படத்திலேயே தரமான இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தார். இப்படம் தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் திரையரங்குகளில் ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சராசரி இளைஞர்களின் வாழ்க்கை சடாரென வன்முறையும், துரோகமும் சூழ்ந்த கொடூர பாதைக்குச் சென்றுவிடுகிறது. அதற்கு ஜெய் காதலிக்கும் காதலியும் துணைபோவது என ரத்தமும் சதையுமாக துரோகத்தின் ரத்த வாடையைப் படம் பிடித்துக்காட்டுவதுதான் இதன் கதைக்களம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
The Meg 2: The Trench (ஆங்கிலம்)

பென் வீட்லி இயக்கத்தில் ஜேசன் ஸ்டேதம், ஜிங் வூ, கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Meg 2: The Trench’. ஆக்ஷன் அட்வன்சர் திரைப்படமான இது ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டைனோசரை விடவும் மிகப்பெரிய ராட்சச சுறா உலகிற்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. கதாநாயகன் மற்றும் அவரது குழுவினர் அதை எப்படிச் சமாளித்து மக்களைக் காப்பாற்றினார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.
Talk to Me

டேனி பிலிப்போ, மைக்கேல் பிலிப்போ இயக்கத்தில் சோபி வைல்ட், அலெக்ஸாண்ட்ரா ஜென்சன், ஜோ பேர்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Talk to Me’. ஹாரர் திரில்லர் படமான இது இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சிலையாகச் செய்யப்பட்ட மர்மம் நிறைந்த கை ஒன்று தொடர்ச்சியாகப் பலரை பலியாக்குகிறது. இதன் பின்னணி என்ன? இந்த மர்மக் கையினால் ஏற்படும் ஹாரர் பிரச்னைகள் எப்படிச் சரியானது என்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Soulcatcher (ஆங்கிலம்) – Netflix

டேனியல் மார்கோவிச் இயக்கத்தில் பியோட்டர் விட்கோவ்ஸ்கி, ஜாசெக் கோமன், ஜேசெக் போனிட்ஜியாலெக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Soulcatcher’. ஆக்ஷன் அட்வன்சர், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தீவிரவாத கும்பலைப் பிடிக்க ராணுவத்தினர் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இருபுறமும் பாயும் துப்பாக்கி குண்டுகள் எனப் போர் தொடங்குகிறது. இந்தத் தீவிரவாத கும்பலின் பின்னணி என்ன, இவர்கள் இராணுவத்திடம் பிடிப்பட்டார்களா என்பதுதான் இதன் கதைக்களம்.
Documentary The Hunt for Veerappan (தமிழ்/ஆங்கிலம்/ இந்தி/மலையாளம்/ தெலுங்கு/கன்னடம்) – Netflix

வீரப்பன்… வாழ்வு முதல் மரணம்வரை தோண்ட தோண்ட திகிலூட்டும் மர்மங்கள் இருக்கின்றன. வீரப்பன் மறைந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் குறித்த சினிமா, சீரியல், வெப் சீரிஸ், ஆவணப்படம் என இப்போதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் குறித்த ரகசியங்களையும் மர்மங்களையும் அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவரையும், அவரின் தேடுதல் வேட்டையையும் மையப்படுத்திய ஆவணப்படம் ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’.
இந்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆக்ஸ்ட் 4-ம் தேதி (இன்று) ‘Netflix’ வெளியாகவுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்
Choona (இந்தி) – Netflix

புஷ்பேந்திர நாத், மிஸ்ரா இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், ஆஷிம் குலாட்டி, ஞானேந்திர திரிபாதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Choona’. இந்த வெப்சீரிஸ் ஆகஸ்ட் 3ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மூடநம்பிக்கை கொண்ட அரசியல்வாதிகள் தங்களின் எதிரிகளைப் பழிவாங்வதில் தீவிரமாக இறங்குகிறார்கள். அவர்களின் செயல்களை நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தியிருக்கும் திரைப்படம் இது.
Dayaa (தெலுங்கு) – Disney+ Hotstar

பவன் சதினேனி இயக்கத்தில் கேசவ் தீபக், ஜே.டி. சக்ரவர்த்தி, பவன் சதினேனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Dayaa’. க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது ஆகஸ்ட் 4ம் தேதி (இன்று) ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பெண்களைக் கொல்லும் சிரியல் கில்லர் ஒருவனிடம் கதாநாயகனின் காதலி மாட்டிக் கொள்ளகிறார். கதாநாயகன் தன் காதலியையும் மற்ற பெண்களையும் காப்பாற்ற அந்த சீரியல் கில்லரைத் தேடிப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். இறுதியில் அந்த சீரியல் கில்லர் பிடிப்பட்டானா, காதலி என்ன ஆனார், இதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.
தியேட்டர் டு ஓடிடி
எறும்பு (தமிழ்) – Amazon Prime Video

சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, காமெடி கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள இதை ஜி.சுரேஷ் இயக்கியுள்ளார். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடன் பிரச்னைகளில் இருக்கும் சாதாரண குடும்பத்தில் துறுதுறுவென இருக்கும் சிறுவன் தங்க மோதிரத்தை தொலைத்துவிடுகிறான். இந்த விஷயம் தெரியாமல் ஊருக்குப் போயிருக்கும் அவரது பெற்றோர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்குள் அந்தச் சிறுவனும், அவனது அக்காவும் சேர்ந்து தங்க மோதிரத்தைக் கண்டுபிடிக்க முயல்வதுதான் இதன் கதைக்களம்.
Rudrangi (தெலுங்கு) – Amazon Prime Video

அஜய் சாம்ராட் இயக்கத்தில் ஜெகபதி பாபு, திவ்யா, ஆஷிஷ் காந்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rudrangi’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அரசக் குடும்பம் ஒன்று மக்களை அடிமைப்படுத்தி துன்பப்படுத்துகிறது. இதை எதிர்த்துக் கதாநாயகன் கிளர்ச்சி செய்து வெல்வதுதான் இதன் கதைக்களம்.
Rangabali (தெலுங்கு) – Netflix

பவன் பாசம்செட்டி இயக்கத்தில் ஆர்.சரத்குமார், ஷைன் டாம் சாக்கோ, யுக்தி தரேஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rangabali’. லோக்கலாக இருக்கும் கதாநாயகன், டாக்டர் படிக்கும் கதாநாயகி இருவருக்குமான காமெடி ரொமான்டிக் காதல்தான் இதன் கதைக்களம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Pareshan (தெலுங்கு) – SonyLIV

ரூபாக் ரொனால்ட்சன், பண்டிட் விஜய் குமார், ஆர்யன் சாண்டி ஆகியோர் இயக்கத்தில் பவனி, முரளிதர், திருவீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஜானர் தெலுங்குத் திரைப்படம் ‘Pareshan’. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளையும், மகிழ்ச்சியான தருணங்களையும் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது ‘SonyLIV ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Guardians of the Galaxy Vol. 3 (English) – Disney + Hotstar

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கிறிஸ் பிராட், சுக்வுடி இவுஜி, பிராட்லி கூப்பர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் ‘Guardians of the Galaxy Vol. 3’. மார்வெல்லின் ‘Guardians of the Galaxy’ படத்தொடரின் கடைசிப்படமாகக் கூறப்படும் இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.