ஐடி நகரம், கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், ஜில் ஜில் கிளைமேட். இப்படியான கனவுகளுடன் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அடியெடுத்து வைத்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழகத்தில் இருந்து சென்று அங்கேயே குடியேறியவர்கள் லட்சக்கணக்கில் இருப்பர். இதேபோல் கேரளா மக்களும் அதிகம். பல தரப்பட்ட மக்களின் வருகையால் பெங்களூரு நகரம் தற்போது திக்குமுக்காடி வருகிறது. எங்கு பார்த்தாலும் ட்ராபிக், பொல்யூசன்.
பெங்களூரு நகரின் நிலை
கொரோனா காலகட்டத்தில் சற்று அடங்கி ஒடுங்கி வீட்டில் இருந்ததோடு சரி. அதன்பிறகு ரோடு ஹவுஸ்புல் தான். பெங்களூரு மட்டுமல்ல, வளர்ந்து வரும் எல்லா நகரங்களிலும் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள்தொகை பெரிய அளவில் அதிகரிக்கும். கிட்டதட்ட இரு மடங்கு என்று கூட சொல்லலாம். அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. குறிப்பாக சாலை வசதிகள்.
மெட்ரோ ரயில் திட்டமும், சாலை வசதிகளும்
பெங்களூருவை பொறுத்தவரை பல்வேறு கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் இது மட்டுமே தீர்வு என்று சொல்லிவிட முடியாது. சாலைகள் தான் முதன்மையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே தற்போதைய சாலைகளை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள் கட்டுதல் என அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டு வருகின்றனர். பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவது.
காங்கிரஸ் அரசின் திட்டங்கள்
அதாவது பேருந்துகளை அதிகப்படுத்துவது. பெங்களூருவில் அரசு பேருந்துகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்கின்றனர். போதிய அளவில் மேம்படுத்தாமல் நஷ்டத்தை தான் சந்தித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற ஜாக்பாட் உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெண் பயணிகளின் பயணம் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப புதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் சாலை வசதிகளை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
டெல்லியில் மீட்டிங்
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் டெல்லி சென்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெங்களூரு நகரின் மேம்பாடு குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
டெண்டர் கோரும் முடிவு
புதிதாக மேம்பாலங்கள், சுரங்க வழி சாலைகள் அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதை கேட்டுக் கொண்ட மத்திய அமைச்சர் விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த சர்வதேச அளவில் கடந்த ஜூலை 14ஆம் தேதி கர்நாடகா அரசு டெண்டர் விட்டுள்ளது.
ஆகஸ்ட் 8 கடைசி நாள்
இதில் சீனா, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெண்டரில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8 கடைசி நாள் ஆகும். அதற்குள் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் டெண்டரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு உரிய திட்டங்கள் வகுத்து செயல்படுத்தினால் பெங்களூரு மக்கள் ஆறுதல் அடையும் அளவிற்கு போக்குவரத்து நெரிசலின் நிலைமை மாறும் எனக் கூறுகின்றனர்.