திருப்பரங்குன்றம்: மதுவினால் கிடைக்கும் வருவாயை நம்பி தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபயணம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கிய அவர், மக்கள் மத்தியில் பேசியதாவது: “மதுவினால் கிடைக்கும் வருமானம், தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணைக்குச் சமம் என சொன்னவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா. ஆனால், மதுவிலிருந்து வரும் வருமானத்தில் ஆட்சி செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது.
தமிழகத்தின் முதல் குடும்ப ஊழல் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. ஒருமுறை உண்மையை பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் சௌராஷ்டிரா மக்கள். நெசவுத்தொழில் செய்யும் அவர்களுக்கு விசைத்தறிக்கூடம் அமைத்துத் தருவதாக திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பாதி நேரம் டெல்லியில் தான் இருப்பார். மதுரை, விருதுநகர் எம்பிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இத்தொகுதியிலுள்ள மீன் மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு குடிதண்ணீர் வரவில்லை என பெண்கள் புகார் தெரிவித்தனர். தண்ணீரும் வருவதில்லை, எம்பி, எம்எல்ஏ போன்ற மக்கள் பிரதிநிதிகளையும் காணவில்லை என அவர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடுக்கு வரவேண்டிய காவிரி நீர் வராது. காரணம், தமிழகத்தில் உள்ள அரசு செயல் இழந்து நிற்கிறது.
கடந்த 2014ல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தனர். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் 79 கோடி பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். கடந்த 2014 ல் 11 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே மாணவிகளுக்கான தனி கழிப்பறை வசதி இருந்தது. அது தற்போது 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடைபயணத்தின்போது சாலையில் கொடி, பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை கீழே விழுகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் பணியை தூய்மை பாரதம் குழுவினர் மேற்கொள்கின்றனர். நாங்கள் சாலையை சுத்தம் செய்வது போன்று அரசியலையும் சுத்தம் செய்கிறோம்.” இவ்வாறு அண்ணாமலை உரையாற்றினார்.
திருமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் நடைபயணம் தொடங்கிய அண்ணாமலை, சிறிது தூரம் சென்றார். பிறகு அவசர பணி நிமித்தமாக பிற்பகல் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் இன்று இரவு நடக்க இருந்த பொதுக் கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்க இருந்த நிலையில், அவர் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.