Unprecedented rain in China forces 10 lakh people to evacuate | சீனாவில் வரலாறு காணாத மழை; 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பீஜிங் :சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்நாட்டின் வடக்கே உள்ள ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை,வடக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ளது.

டோக்சுரி சூறாவளி காரணமாக பீஜிங்,ஹூபே, தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. நகரின்சாலைகள், இருப்புப் பாதைகள் என காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறின.

இதற்கிடையே, வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை, 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், பலர் மாயமாகி உள்ளனர். இதையடுத்து, அவர்களை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், கடும் அதிருப்திக்குள்ளான அப்பகுதி மக்கள், சமூக வலைதளத்தின் வாயிலாக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வெள்ள நீர் சூழ்ந்ததால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிப்போர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

மறுபக்கம் நிலநடுக்கம்

கிழக்கு சீனாவில் ஷாண்டாங் மாகாணத்தின் பிங்குயான் பகுதியை மையமாக வைத்து நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. இதனால், அங்கு வசித்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அங்குள்ள 126 கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர். பீஜிங், தியான்ஜென், ஹெனான், ஹெபெய் உள்ளிட்ட மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் ரயில் சேவைகளும் தடைப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.