"ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் தொடர்ந்து வருத்தத்தை தருகின்றன".. திடீரென குரல் தழுதழுத்த ஸ்டாலின்!

சென்னை:
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல; திறமை சார்ந்ததாகவும் மாற வேண்டும். வேலை என்பது சம்பளம் சார்நதது மட்டுமல்ல; திறமை சார்ந்ததாகவும் மாற வேண்டும். அந்த திறமையை உங்களிடம் (மாணவர்கள்) உருவாக்கவும், வளர்க்கவும் உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய நான் உறுதியேற்று இருக்கிறேன். உங்களின் முதல்வராக இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதற்கான வேலைகளில் ஈடுபட இருக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக நான் முன்னேறி இருக்கிறேன்.. நல்ல நிலையில் இருக்கிறேன் என ஒவ்வொரு மாணவர்களும் சொல்லப் போகிறார்கள். அந்த வார்த்தையை கேட்பதை விட எனக்கு வேறு பெருமை இருக்க முடியாது.

இந்த நேரத்தில் ஒரு வருத்தமான செய்தியையும் பதிவு செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. குடிமைப் பணி தேர்வு எனப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. 2014-இல் 10 விழுக்காட்டுக்கு மேல் இருந்த தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தற்போது 5 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது என்னை உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட வைக்கிறது.

இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். நாம் தான் அதை மாற்ற வேண்டும். அதற்காகதான், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடிமைப் பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக சமீபத்தில் 2 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன். அதன்படி, ஆண்டுதோறும் 1000 பேருக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்காக மாதம் ரூ.7,500 என்ற வீதம் 10 மாதத்துக்கு வழங்கப்படும்.

அடுத்ததாக, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அதை விட முக்கியமானது, அவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறினால் நம் தமிழ்நாட்டுக்குதான் பெருமை. இதை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.