புதுடில்லி ‘ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, பணித் திறன் சோதனை நடத்தி, பணி நீட்டிப்பு வழங்கலாம்’ என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
சட்டம் மற்றும் பணியாளர் நலனுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு சமீபத்தில் ஒரு அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது, ௬௫; உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது, ௬௨ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கு அரசியலமைப்பு சட்டப் பிரிவில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், ஓய்வு பெறும் நீதிபதிகளின் சேவையை பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம். அவர்களுடைய உடல்நிலை, பணிகாலத்தில் அளித்த தீர்ப்புகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பணித் திறன் சோதனை நடத்தி, பணி நீட்டிப்பு வழங்கலாம்.
இதற்கான வழிமுறைகளை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் வகுத்து, முடிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆண்டுக்கு ஒருமுறை தங்களுடைய சொத்து விபரங்களை தாக்கல் செய்வதை கட்டாயமாக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement