தூத்துக்குடி டூ இலங்கை… கப்பல் போக்குவரத்தால் இவ்வளவு நன்மைகளா… அரசு எடுக்கும் முடிவு என்ன?

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். கடந்த மாதம் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்பு இருநாடுகளின் உறவு மேம்பாடு குறித்து பேசிய பிரதமர் மோடி இதனை அறிவித்தார்.

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இருப்பினும் அந்த பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் சுங்க அலுவலகம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி – கொழும்பு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தியா – இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தவும் தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி VOC துறைமுகத்தில் ‘ஸ்கோடியா பிரின்ஸ்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ஆறு மாதங்களுக்குப் பிறகு சேவை அந்த நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த கப்பர் சேவையை தற்போது மீண்டும் தொடங்க வேண்டும் என தூத்துக்குடி கடலோர எந்திரமயமாக்கப்பட்ட பாய்மர கப்பல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி ஹப் போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள தூத்துக்குடி ஹப் போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் தலைவர் ஜே.பி.ஜோ வில்லவராயர், இலங்கை – தூத்துக்குடி இடையே கப்பல் சேவையை மீண்டும் தொடங்கினால், வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றார். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதிநிதிகள் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்து இங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாம்பன் பாலம் அருகே ராமர் சேது கால்வாய் தூர்வாரும் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் திட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணத்திற்கான கடல் பாதை ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து குறுகிய ஒரு பாதையாக இருக்கும் என்றும் வில்லவராயர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடலோர இயந்திரமயமாக்கப்பட்ட பாய்மர கப்பல் உரிமையாளர்கள் சங்கமும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவையை தேர்வு செய்ததற்கு பதிலகா, மீண்டும் தூத்துக்குடி – இலங்கை கப்பல் சேவையை தொடங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் 2011 ஆம் ஆண்டு‘ஸ்கோடியா பிரின்ஸ்’ கப்பல் கொழும்புவுக்கு பயணத்தை மேற்கொண்ட போது, தூத்துக்குடியில் இருந்து பயணிகள் லுங்கிகள் உள்ளிட்ட ஆடைகளை அங்கு கொண்டு சென்றதாகவும் அங்கிருந்து திரும்பும் போது சோப்பு, தேநீர் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் வர்த்தகம் சிறப்பாக இருந்தது, பலர் பயன்பெற்றனர் என்றும் அந்த படகில் பயணம் செய்தவர்களும் தங்களின் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். தூத்துக்குடி – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.