நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் குக்கிப் பழங்குடியினப் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியபோதும், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டே வந்தன. இறுதியாக எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, வேறு வழியில்லாமல் நேற்று விவாதம் தொடங்கியது.

இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் தொடங்கியதுமே முதல் ஆளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “மணிப்பூரில் நீங்கள் (பா.ஜ.க) பாரத மாதாவை எரித்துவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்” எனக் காரசாரமாக விவாதத்தைத் தொடங்கிவைத்தார். இதற்கு பா.ஜ.க எம்.பி-க்கள் பலரும் கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில், மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி, `இந்தித் திணிப்பை நிறுத்திவிட்டு சிலப்பதிகாரத்தைப் படியுங்கள்’ என மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்திருக்கிறார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றிய கனிமொழி, “இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலத்தில் நீதித்துறை தலையிட வேண்டியிருக்கிறது. இதற்கு வெட்கமாக இல்லையா… மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் உட்பட 161 பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், இரட்டை இன்ஜின் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.

இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு முன்பு போலீஸிடம் உதவிக்குச் சென்றனர். ஆனால், போலீஸார் எதுவும் செய்யவில்லை. தேசிய மகளிர் ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும் எதுவும் செய்யவில்லை. ஒருவேளை எல்லாம் அப்படியே போய்விடும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், துரதிஷ்டவசமாக வீடியோ வைரலானது.
இங்கிருப்பவர்கள் நிறைய பேர் திரௌபதியைப் பற்றிப் பேசினார்கள். திரௌபதியைப் போலத்தான், மணிப்பூர் பெண்களும் தங்களின் ஆடைகள் கழற்றப்படும்போது ஏதேனும் ஒரு கடவுளை வேண்டியிருப்பார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற கடவுளும் வரவில்லை, அரசும் வரவில்லை. மகாபாரதத்தை நன்கு படித்தவர்களுக்கு, குற்றம் செய்தவர்கள் மட்டுமல்லாது, அதை அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டனர் என்பது தெரியும். கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை, பில்கிஸ் பானு, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், மணிப்பூர் கொடுமையின்போது அமைதியாக இருந்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோல் நிறுவியது குறித்துப் பேசிய கனிமொழி, “செங்கோலை நீங்கள் (மோடி) சோழர் மரபுக்குச் சொந்தமானது என்று கூறி பெரும் ஆரவாரத்துடன் புதிய நாடாளுமன்றத்து கொண்டுவந்தீர்கள். ஆனால், உங்களுக்குத் தமிழர்கள் வரலாறு தெரியாது. பாண்டியன் செங்கோல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா… பாண்டிய மன்னன் மக்களைக் கைவிட்டபோது, அவரின் செங்கோல் பற்றியெரிந்தது. அதோடு, கண்ணகி கதை தெரியுமா… இனி எங்கள்மீது இந்தியைத் திணிப்பதை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். உங்கள் அனைவருக்கும் கற்பிக்க நிறைய பாடங்கள் இருக்கின்றன” என்றார்.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியை ஏற்றுக்கொள்வது மெதுவாக இருந்தாலும், எதிர்காலத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.