மதுரை: வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் நீர் வளத்துறை செயலாளர் தெரிவித்தார்.
சிவகாசி ஆணையூர் அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த ஏ.எஸ்.கருணாகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பலர் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். பட்டா நிலங்களில் பல நாட்களாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து அதில் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்கின்றனர்.
இதை அனுமதித்தால் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் வத்திப்போக வாய்ப்புள்ளது. எனவே, அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் பட்டா நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து வணிக நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீர்வளத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிட்டார்.
நீர் வளத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், நிலத்தடி நீர் குறித்து கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அரசாணை அடிப்படையில் நிலத்தடி நீரை எடுக்க உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும்.
நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுப்பதை வரைமுறைப்படுத்தும் சட்டம் உயர் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. மசோதா இறுதி செய்யப்பட்டதும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை ஆக. 11-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.