நாங்குநேரி சம்பவம் : சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் – ஜிவி பிரகாஷ் கோபம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி – அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை (12ம் வகுப்பு) என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி (9ம் வகுப்பு) என்ற மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவர்களை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அடங்கிய கும்பல் இரவு 10 மணியளவில் சின்னதுரையின் வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து சின்னதுரையை சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற தங்கை சந்திரா செல்வியையும் அவர்கள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த இருவரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கருத்து பதிவிட்டுள்ள ஜிவி பிரகாஷ், ‛‛தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்'' என தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், ‛‛கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்,'' என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.