புதுடில்லி:மணிப்பூர் கலவரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘பிற சமூகத்தினர், தங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற தகவலை சொல்வதற்காகவே, வன்முறை கும்பலைச் சேர்ந்தோர், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை அரங்கேற்றுகின்றனர்’ என, தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 7 ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மணிப்பூரில் நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை கண்காணிப்பதற்கு ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் வேதனை அளிக்கின்றன. இதுபோன்ற கொடுமைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. வன்முறை கும்பல்கள், பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமையில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஒரு பெரிய கும்பல் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், தண்டனையிலிருந்து எளிதில் தப்பி விடலாம் என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பிற சமூகத்தைச் சேர்ந்தோர் தங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற தகவலை கூறுவதற்காகவும், பெண்களுக்கு எதிரான கொடூரங்களை, வன்முறை கும்பல்கள் அரங்கேற்றுகின்றன. இதுபோன்ற வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை.
பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் கொடுமை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
கலவரம் குறித்த சி.பி.ஐ., விசாரணையை கண்காணிப்பதற்காக, மஹாராஷ்டிரா முன்னாள் டி.ஜி.பி., தத்தாத்ராய் பத்சல்கிகார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்