சென்னை: சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக கோட்டை அருகே முதல்வரை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.
அப்போது, தென் இந்திய பகுதிகளின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, தாம்பரம் விமானப் படை அதிகாரி ஏர் கமாண்டர் ரத்தீஷ் குமார், கிழக்கு மண்டல கடலோர காவல் படை அதிகாரி ஆனந்த பிரகாஷ் படோலா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபிஅருண் ஆகியோரை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார். குறிப்பாக, அணிவகுப்பு தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமையிலான தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, ஆண்கள் கமாண்டோ, சென்னை பெருநகர காவல் பெண்கள் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு சிறப்பு காவல் ஆண்கள் படை, நீலகிரி படை, கொடி அணி, மாநிலகாவல் வாத்தியக் குழு, குதிரைப் படை பிரிவு ஆகியவற்றின் அணிவகுப்பை முதல்வர் பார்வையிட்டார். இந்த ஆண்டு அணிவகுப்பில் கேரள ஆயுதப்படை 3-வது பட்டாலியன் உதவி ஆய்வாளர் சஞ்சுசன் தலைமையிலான கேரள காவல் படைப் பிரிவினர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.