அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஜாக்சன்வில்லிப் பகுதியில், 9 வயது சிறுவனால், 6 வயது சிறுவன் ஒருவன் சுடப்பட்டதாகக் காவல்துறைக்குத் தகவலளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு மயக்க நிலையில் கிடந்த 6 வயது சிறுவனை மீட்டனர். அதைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

ஆனால் அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, “அந்த வீட்டில் 9 வயது சிறுவனும், 6 வயது சிறுவனும் விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதுதான் அந்த 9 வயது சிறுவன், 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் இது தவறுதலாக, எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவமாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனெனில் உள்நோக்கத்துடன் இந்தச் சம்பவத்தை அந்தச் சிறுவன் செய்யவில்லை. இருப்பினும், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். சுடப்பட்ட சிறுவன், துரதிஷ்டவசமாக இறந்துவிட்டான்.

அந்தத் துப்பாக்கி யாருடையது… அது எப்படி அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது. இரு சிறுவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. தி நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, கொரோனா காலமான 2022-ல் 531 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.