- கடந்த காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசியல் சம்பிரதாயத்திலிருந்து விலகி, எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் – நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.
எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், வலுசக்தி சேமிப்பு, வலைப்பதிவு பிளெக்செயின் தொழில்நுட்பம் மற்றும் ஜெனொம் விஞ்ஞானம் போன்ற துறைகள் இன்று உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அந்த தொழில் நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல நமது வருங்கால சந்ததியை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் 2019/2020 வருடாந்த பரிசளிப்பு விழாவில் (18) பிற்பகல் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுளார்.
கடந்த காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசியல் சம்பிரதாயத்திலிருந்து விலகி, எதிர்காலத்தை மையமாகக் கொண்டு முன்னோக்கிச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், புதிய கல்வி முறையின் மூலமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நுகேகொடை அனுலா வித்தியாலய மாணவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைத்ததுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டனர்.
ஜனாதிபதியொருவர் நுகேகொடை அனுலா வித்தியாலயத்திற்கு வருகை தந்த முதல் தடவை என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றையும் பாடசாலை அதிபர் வழங்கினார்.
மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நுகேகொடை அனுலா வித்தியாலயம் இன்று அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அதிபர் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஈ.டபிள்யூ.அதிகாரம், இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும்போது, இந்தப் பாடசாலை இப்படியொரு நிலைக்கு வரும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் இன்று நுகேகொடை அனுலா வித்தியாலயம் நாட்டில் உள்ள பிரதான பாடசாலைகளில் ஒன்றாக இருக்கின்றது.
பாடசாலை என்பது, எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஒரு இடமாகும். அதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் ஒரு குடிமகனை உருவாக்கும் இயலுமையைக் கொண்டது. ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த கல்வி முறைக்கும் இன்றுள்ள கல்வி முறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாத்திரமே அன்று இருந்தன. ஆனால் இன்று கல்விக்கு, கையடக்கத் தொலைபேசி, கணினி பயன்பாடு என்பன இணைந்துள்ளன. அன்று மின்சார வாகனங்கள் பற்றி சிந்தித்திருக்கவில்லை. ஆனால் இன்று இலத்திரனியல் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கடந்த காலங்களில் வேகமாக முன்னேறி வந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அத்தகைய சூழலில் இன்று புதிய கல்வி முறைமையொன்று அவசியமாகும்.
சமுதாயத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும். சவால்களை முறியடிக்கக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை கல்வியால் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய, எதிர்காலத்தைப் பற்றிய புரிதல் கொண்ட கல்வி முறைமையை நம் நாட்டில் உருவாக்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பா தீப்பற்றியெறியும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதனால் தான், ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் காலத்தை 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளி அதனை துரிதப்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதன்படி, 2050 ஆம் ஆண்டாகும் போது நிறைவு செய்ய வேண்டியிருந்த காலநிலை நிகழ்ச்சி நிரலை 2040ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன.
மற்றைய விடயம், உலகப் பொருளாதாரம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளது.செயற்கை நுண்ணறிவு, ரோபா தொழிநுட்பம், வலு சக்தி சேமிப்பு, பிளொக் செயின் தொழில்நுட்பம், ஜெனொம் விஞ்ஞானம் ஆகிய சில துறைகள் மாத்திரம் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.
இந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் பொருளாதாரத்தில் 300 முதல் 700 டிரில்லியன் டொலர் வரையிலான பாரிய பெறுமதி இணையும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.இந்த பொருளாதாரத்துடன் தான் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.
1970 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் ஆடைத் தொழிலுக்கு நாம் தயாராக இருந்ததைப் போலவே, இப்போது அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்குத் தயாராவதற்கு முதலில் இந்த நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும். இந்தப் பாடங்களுக்கு உகந்த வகையிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும். மேலும், ஆங்கில மொழி, சீன மொழி , ஹிந்தி மொழி ஆகிய மொழி அறிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அப்படியானால், இந்த விடயத்தில் அறிவைப் பெறக்கூடிய பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவ நாம் திட்டமிட்டுள்ளோம். பணம் காரணமாக கல்வியை நிறுத்தாமல், மாணவர்களுக்கு அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு, வெளிநாடுகளைப் போல் மானிய முறையில் கடன் வழங்கும் திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்.
இன்று நீங்கள் Gen Z தலைமுறையின் குழந்தைகள். அடுத்து, Gen Afla குழுவுக்கு தயாராக வேண்டும். அங்கு கையடக்கத் தொலைபேசி மூலம் கல்வியைப் பெறலாம். இவ்வாறு, கல்வி முறை முற்றிலும் மாறுபடுகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.
அரசியல்வாதிகள் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரமே சிந்திக்கிறார்கள்.மாணவர்களாகிய நீங்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம்.எனவே இதை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களை எப்படியாவது நிகழ்காலத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை.புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும்.தொழிற்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வீதிகள் அமைக்க முடியும், என்றாலும் கல்வி அறிவு இல்லாமல் எதிர்காலம் இல்லை.எனவே, புதிய கல்வி முறையை உருவாக்கி நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, மேஜர் பிரதீப் உந்துகொட, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் எயார் ரொஷான் குணதிலக மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.