2047ஆம் ஆண்டு டார்கெட்… கிராமங்களின் மேம்பாடும், இந்தியாவின் வளர்ச்சியும்… பிரதமர் மோடி பலே தகவல்!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான அச்சாரம் ஒருபுறமும், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்கள் மறுபுறமும் என மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஜில்லா பஞ்சாயத்து கூட்டம்

இந்நிலையில் பாஜக ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள் உடனான காணொலி வாயிலான கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு “ஷத்ரிய பஞ்சாயத்தி ராஜ் பரிஷத்” எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேச்சு

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு கிராமங்கள், தாலுக்காக்கள், மாவட்டங்களில் இருந்து தொடங்கப்பட வேண்டும். இதன்மூலம் வரும் 2047ஆம் ஆண்டு முன்னேறிய இந்தியாவை காணலாம். உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு படிநிலைகளில் பணியாற்றும் உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெண் குழந்தைகள் கல்வி

மேலும் பேசுகையில், நான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது எனக்கென்று தனி பாணியை உருவாக்கி கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமை (Themes) பயன்படுத்தினேன். உதாரணமாக பெண் குழந்தைகளின் கல்வி என்று எடுத்து கொண்டால் காவல்துறையினர், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் என அனைவரும் தங்கள் வேலையை தாண்டி சிறிதளவேனும் பங்களிப்பை செலுத்த வேண்டும்.

ஒவ்வொருவரின் பங்களிப்பு

அனைவரது மொத்த ஆற்றலையும் செயல்படுத்தும் போது மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசும் போதும், ஒட்டுமொத்த அமைப்பிலும் ஓர் அங்கமாக நானும் இருக்கிறேன். அதனால் கீழ்மட்ட அளவில் இருந்து அனைத்து தகவல்களையும் விரைவாக பெற முடிகிறது. அதை தற்போதும் பெற்று வருகிறேன்.

கீழ்மட்ட அளவிலான தகவல்கள்

இதை அதிகாரிகளிடம் சொல்லும் போது, அவர்களே ஆச்சரியப்படுவர். அடுத்த முறை அவர்கள் அலர்ட்டாகி விடுவர். எனக்கு முன்பாக தகவல்களை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவர். இவ்வாறு தகவல்களை சேகரித்து வைப்பது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கில் தான்.

உள்ளாட்சியில் ஓர் அங்கம்

உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கும் நீங்களும் உங்கள் மாவட்டங்களின் கீழ்மட்ட அளவில் இருந்து தகவல்களை சேகரியுங்கள். உங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்த முயற்சிக்கவும். இதன்மூலம் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் நீங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.