அதிமுக மாநாட்டிற்கு அதிரடியாக வருகை தந்த சவுக்கு சங்கர்.. எடப்பாடி தலைமையில் கட்சியில் இணைய திட்டமா?

மதுரை:
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு பிரபல யூடியூபரும், சமுக ஆர்வலருமான சவுக்கு சங்கர் முதல் ஆளாக வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தலைமையில் அதிமுகவில் அவர் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், தினகரன், சசிகலா போன்ற சக்திவாய்ந்த முக்குலத்து சமூகத்து தலைவர்கள் பிரிந்து சென்ற நிலையில், தேவர் இன மக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காகவே மதுரையில் இந்த மாநாட்டை எடப்பாடி நடத்துகிறார் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சீனியர் தலைவர்கள் பலர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்தார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர். தற்போது ஆட்சி மாறியதும் திமுகவை லெப்ட் ரைட் வாங்கி வருகிறார் சவுக்கு சங்கர்.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து சவுக்கு சங்கர் மேற்கொண்ட சமூகவலைதள பிரச்சாரங்கள்தான், அவர் மீது வருமான வரித்துறையின் கவனம் திரும்புவதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்திருப்பதன் நோக்கம் குறித்து அங்கிருந்த நிருபர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர், “நாளை நடைபெறவுள்ள அதிமுக மாநாடானது அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சிதறிவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதிமுகவை சிதறவிடாமல் ஒருங்கிணைத்தவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை அதிமுக தொண்டர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை கவனிப்பதற்காக வந்தேன்” என அவர் கூறினார்.

அப்போது ஒரு நிருபர், “அதிமுக மாநாட்டிற்கு வந்துள்ளீர்கள். எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்து பயணிப்பீர்களா..?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து சவுக்கு சங்கர் கூறுகையில், “நிச்சயமாக அதற்கான வாய்ப்பு துளியும் இல்லை. அதிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சியை விமர்சிக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவன் நான். நாளை அதிமுக ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களையும் விமர்சிப்பேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.