கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை கைவிடுக: விஜயகாந்த்

சென்னை: “கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும்‌ திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட்‌ என பெயர்‌ பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்‌ திட்டமிட்டு உள்ளது. மேலும்‌, அந்த இடத்தில்‌ வணிக வளாகம்‌, நட்சத்திர ஓட்டல்‌, விளையாட்டு மைதானம்‌ போன்றவை அமைக்க முடிவு செய்துள்ளது. லாப நோக்கத்திற்காக கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற திட்டமிட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்‌. கோயம்பேடு மார்க்கெட்‌ வேறு பகுதிக்கு மாற்றப்பட்டால்‌, இங்கு சொந்தமாக கடைகளை வாங்கி உள்ள வியாபாரிகளின்‌ நிலைமை என்னவாகும்‌? மேலும்‌, கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களின் வாழ்வாதாரம்‌ கேள்விக்குறியாகும்‌.

கோயம்பேடு மார்க்கெட்‌ சென்னையின்‌ முக்கிய இடத்தில்‌ இருப்பதால்‌, சென்னைவாசிகள்‌ எந்தவித சிரமமின்றி காய்கறிகள்‌, பழங்கள்‌, பூக்கள்‌ போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்‌. மேலும்‌, வியாபாரமும்‌ அதிகளவில்‌ நடைபெறுவதால்‌ வியாபாரிகளும்‌ நல்ல லாபத்தை பார்த்து வருகின்றனர்‌. ஏற்கெனவே கரோனா காலகட்டத்தில்‌ கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றப்பட்டபோது, வியாபாரிகளும்‌ பொதுமக்களும்‌ பாதிக்கப்பட்டனர்‌. அதனால்‌, இந்த மாற்று யோசனை என்பது நிச்சயம்‌ பலன்‌ அளிக்காது.

எனவே கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றினால்‌ வியாபாரிகளும்‌ பொதுமக்களும்‌, பல்வேறு இன்னல்களையும்‌ கஷ்டங்களையும்‌ சந்திக்க நேரிடுமே தவிர, வேறு எந்தவித ஆதாயமும்‌ ஏற்படாது. சென்னையின்‌ அடையாளமாக திகழும்‌ கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும்‌ திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்‌ உடனடியாக கைவிட வேண்டும்‌. வணிகர்கள்‌ மற்றும்‌ அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரத்தை பாதுகாத்திட இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்‌.

இல்லையென்றால்‌ அரசின்‌ இந்த நிலை துக்ளக்‌ ஆட்சியுடன்‌ ஒப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்‌. எனவே, யாருக்கும்‌ பலனளிக்காத இந்தத் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்‌ என தேமுதிக சார்பில்‌ கேட்டுக்கொள்கிறேன்‌” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.