மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பட்டா நிலத்தில் செம்மண் அள்ளுவதாக அனுமதி பெற்று 3 அடிக்குப்பதிலாக 20 அடி ஆழத்துக்கு செம்மண் எடுப்பதால் பக்கத்திலுள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் மண் சரிவு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனிமவளக் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் விரைந்து தடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் மனு அளித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்த மார்கிஸ்ட் கட்சி கிளைச்செயலாளர் ரா.தங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: சேந்தமங்கலம் ஊராட்சியில் எனது நிலத்துக்கு அருகில் சுமார் 20 அடி ஆழத்துக்குமேல் இயந்திரங்கள் மூலம் செம்மண் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. என் நிலத்தில் அருகில் செம்மண் எடுப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை.
ஆடு, மாடுகள் வளர்க்க முடியாத நிலையும் உள்ளது. அதேபோல் 20 அடி ஆழத்துக்கு மேல் என மண் அள்ளுவதால் மழையின் போது மன் சரிவு ஏற்படுவதால் விவசாயம் செய்ய முடியவில்லை. என்னைப்போல் மற்ற விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு விதிமுறையை மீறி 3 அடி ஆழத்துக்குமேல் செம்மண் அள்ளி, சட்டத்துக்கு விரோதமாக லாரிகளில் கடத்தி வருகின்றனர். இதுகுறித்து வாடிப்பட்டி வட்டாட்சியர் உள்பட கனிமவளத்துறையினர் விசாரணை நேரடியாக வந்து விசாரணை செய்தும் இதுவரை தடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
அப்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மலை.கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.சேதுராஜன், கிளைச் செயலாளர் ஆர்.தங்கம் பங்கேற்றனர்.