7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற நர்சுக்கு வாழ்நாள் சிறை தண்டனை – இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்,

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றி வந்தது தெரிந்தது.

இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகமும் தெரிவித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நோய்வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் 7 குழந்தைகளை கொன்றதாகவும், 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது. இந்த வாதத்தின் நிறைவில், நர்சு லூசி லெட்பி மிகவும் கொடூரமான குற்றங்களை செய்திருப்பதால் அவர் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். எனவே, அவர் எஞ்சியுள்ள வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும்.

பிரிட்டனில் 70 வகையான குற்றங்களுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மூன்று பெண்களுக்கு மட்டுமே இத்தகைய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.