அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏற்கெனவே இறங்கிவந்த நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.42 அளவுக்கு சரிந்தது. இது இந்திய ரூபாய் மதிப்புக்கு வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கான காரணங்கள் என்னென்ன?
அமெரிக்க சந்தைகளின் தாக்கம்…
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு, பன்னாட்டுச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் ஏற்கெனவே பணவீக்கம் அதிகமாக இருப்பதால், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. பெடரல் ரிசர்வ் கடந்த ஜூலை மாதம் வட்டி விகிதத்தை மீண்டும் 0.25% உயர்த்தியது.
இதற்குப் பிறகும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பெடரல் ரிசர்வ் வங்கி சூசகமாக தகவல் சொல்லி இருக்கிறது. பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கொள்கை வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டியிருக்கும் என பெரும்பாலான மத்திய வங்கிகள் கருதுவதாக பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இதனால் அமெரிக்கச் சந்தைகளில், கடன் பத்திரங்களின் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும், இந்தியா உள்பட பல பன்னாட்டு நாணயச் சந்தைகளில் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது.
அமெரிக்க கடன் சந்தைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது இதற்கு முக்கியமான காரணம் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற பரவலான எதிர்பார்ப்பால், பன்னாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலர் இண்டெக்ஸ் மதிப்பு உயர்ந்தது. இதுவும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

சீன யுவான் நாணயத்தின் சரிவு…
சமீப காலமாக, சீனாவின் பொருளாதார நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் சந்தைகளுக்கு நம்பிக்கை அளிப்பவையாக இல்லை. சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், அந்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாணயங்களுக்கு நிகரான சீன யுவான் மதிப்பு சரிந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மட்டும் ஒரே நாளில் சீன யுவான் நாணயம் 0.40% குறைந்து, 7.2927 என்ற அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
யுவான் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியால் சீன ஏற்றுமதிப் பொருள்களின் விலை குறைந்து சந்தையில் போட்டியை அதிகப்படுத்தும் என்ற கவலையும் இந்திய ரூபாய் மதிப்பை பாதித்துள்ளது.
பணவீக்கம் குறித்த அச்சங்கள்…
பன்னாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு கமாடிட்டி பொருள்களின் விலையேற்றம் இந்தியாவில் பணவீக்கத்தைத் தூண்டியிருக்கிறது.
மேலும், உள்நாட்டில் பருவமழை பற்றாகுறையினால் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தியா மீண்டும் ஒருமுறை கடுமையான பணவீக்கத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துவருவதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும்; குறிப்பாக, தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை அதிக விலை தந்து வாங்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்தால், விலை இன்னும் மிக அதிகளவில் உயரும் என்கிறார்கள் கமாடிட்டி நிபுணர்கள்!

அந்நிய செலாவணிக் கையிருப்பு…
தற்போதைய நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 600 பில்லியன் டாலருக்கும் மேலான அந்நிய செலாவணிக் கையிருப்பு உள்ளது. எனவே, ரூபாய் சரிவு குறித்து நாம் பெருமளவு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அதே சமயம், உலக நடப்புக்களையும், இந்திய ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தின் போக்கினையும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது.
தேவைக்கேற்ற வகையில் மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அன்றாட நாணய வணிகத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பலாம்.