புதுடில்லி:மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பெண் ஏட்டு கையை வெட்டிய, கணவர் மீது டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 28 வயது பெண், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், தலைமைக் காவலராக பணியாற்றுகிறார்.
இவர், டில்லியில் இன்று நடக்கும் துறைரீதியான எழுத்துத் தேர்வில் பங்கேற்க, கணவருடன் டில்லிக்கு வந்தார்.
வடமேற்கு டில்லி ஆதர்ஷ் நகரில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று முன் தினம் மதியம் 3:00 மணிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்த கணவர், மனைவியின் மணிக்கட்டை வெட்டித் துண்டித்தார். அதன்பின் அறையில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.
அந்தப் பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த போது, தன் கை வெட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், அவரை மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தலைமறைவாக உள்ள அவரது கணவர் மீது, டில்லி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement