புதுடில்லி, புதுடில்லியில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ‘ஜி – 20’ மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடினுக்கு பதிலாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜி – 20 அமைப்பிற்கு நம் நாடு தலைமை வகிப்பதை ஒட்டி, இது தொடர்பான கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன.
இந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு, அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்கவுள்ளது. இங்குள்ள பிரகதி மைதானத்தில் நடக்கவுள்ள கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இந்நிலையில், நம் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடினுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, ஜி – 20 மாநாட்டில் பங்கேற்க முடியாதது குறித்து தெரிவித்த புடின், தனக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பார் என கூறினார்.
பின், இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.
சமீபத்தில், தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து முடிந்த ‘பிரிக்ஸ்’ மாநாடு உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியா தலைமையில் நடக்கும் ஜி – 20 மாநாடுக்கு ரஷ்ய அளித்து வரும் ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் போரில், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட போர் குற்றங்களுக்காக, ரஷ்ய அதிபர் புடினை போர்க் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், தென் ஆப்ரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும், அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்