சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, அபிராமபுரம் அருகே சாலையில் நேற்று மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி 3-வது வழித் தடத்தில் பசுமை வழிச்சாலையில் சுரங்கப் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து நெரிசல்: இந்நிலையில், சென்னை அபிராமபுரம் அருகே சாலையில் திடீரென 1.5 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளத்தைச் சுற்றி தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டன. திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே மெட்ரோ ரயில் வழித் தடத்துக்கான பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டது தெரிய வந்தது. இச்சாலையில் நேற்று போக்குவரத்து அதிகளவில் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி, மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.