உலக நாடுகளுக்கு வானிலை தகவல்களை வழங்க இந்தியாவின் சார்பில் ஜி20 செயற்கைக்கோள் – பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: உலக மக்களின் நலன் கருதி இந்தியாவின் சார்பில் ‘ஜி20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு’ திட்டம் செயல்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் மூலம் பருவநிலை, வானிலை தொடர்பான தகவல்கள் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக முதல் அமர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல்வேறு நம்பிக்கை, ஆன்மிகம், மரபுகள் நிறைந்த நாடு இந்தியா. உலகின் முக்கிய மதங்கள் இந்தியாவில் தோன்றின. பண்டைய காலம் முதல் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. எங்களைப் பொறுத்தவரை உலகத்தை ஒரே குடும்பமாக கருதுகிறோம். சுற்றுச்சூழலோடு இணைந்து வாழ்கிறோம்.

இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு,சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சாரம்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதன்காரணமாக சூரிய மின் உற்பத்தி புரட்சி நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளனர். ‘தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை’ நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பெரும் தொகை தேவைப்படுகிறது. இதற்காக வளர்ந்த நாடுகள் 100 பில்லியன் டாலர் தொகையை வழங்க உறுதி அளித்துள்ளன. இதை வரவேற்கிறோம். மேலும் ‘பசுமை வளர்ச்சி ஒப்பந்தத்தை’ ஜி-20 அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஜி-20 உச்சி மாநாட்டின் வாயிலாக சில ஆலோசனைகளை இந்தியா முன்வைக்கிறது. அதாவது இந்தியாவை போன்று உலக நாடுகள், பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனாலை கலக்கலாம் அல்லது வேறு எரிபொருள் கலவை குறித்து ஆய்வு செய்யலாம். இதன்மூலம் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதை கருத்தில் கொண்டு சர்வதேச பசுமை எரிசக்தி கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுக்கிறது.

சந்திரயான் 3 திட்டம்: இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைந்திருக்கிறது. இதன்மூலம் சேகரிக்கப்படும் அரிய தகவல்கள் ஒட்டுமொத்த உலகத்துக்கும் பலன் அளிக்கும். உலக மக்களின் நலன் கருதி ‘ஜி20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு’ திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் மூலம் பருவநிலை, வானிலை தொடர்பான தகவல்களை அனைத்து நாடுகளுடனும் இந்தியாபகிர்ந்து கொள்ளும். குறிப்பாக தெற்கு நாடுகள் தொடர்பான வானிலை தகவல்கள் அந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த திட்டத்தில் ஜி-20 உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.