மதுரை: மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்ட கிளை சார்பில், அரங்கக் கூட்டம் நடந்தது.
தலைவர் பேராசிரியர் அ. சீநிவாசன் தலைமை வகித்தார். ‘ஜனநாயகத்தின் குரல் வலையை, வழிமுறைகளிலேயே நெறிக்க, முயல்கிறதா மத்திய அரசு’ எனும் தலைப்பில் மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் ஜி.பாலசந்திரன் பேசினார். புதிய குற்றவியல் சட்டத்திருத்தம் காவிமயமாகிறதா நீதி பரிபாலன முறை என்ற தலைப்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருத்துரை வழங்கினார். முன்னாள் பேராசிரியர் முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயலர் லயனஸ் அந்தோனிராஜ் நன்றி கூறினார்.
முன்னதாக, பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது; 1971-க்கு முன்பு இந்தியாவிற்குள் வந்தவர்கள் மட்டும் இருக்கலாம். மற்றவர்களுக்கு இந்தியாவில் உரிமையில்லை. இதை எவ்வளவு பேர் காட்ட முடியும். இது உரிமை மீறல். ஜனநாயகத்தின் குரல் வலையை சட்டம் மூலம் மத்திய அரசு நெறிக்க பார்க்கிறது. மக்களுக்காக தான் சட்டம். தேவையின் அடிப்படையில் பலமுறை சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை உரிமையை நசுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரக்கூடாது.
இந்தியாவில் பவுத்தம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் இருந்தால், குழப்பத்தில் ஆங்கில அரசு இந்து என, அறிவித்தது. சனாதனமே தான் இந்து என சொல்கின்றனர். இதை ஏற்றால் பிற மதங்கள் காணாமல் போகிவிடும். சனாதனம் மட்டுமின்றி எல்லா மதத்திலும் உயர்ந்த கொள்கைகள் உண்டு. சனாதன தர்மத்தை ஏற்கிறதா, இல்லையா என, சொல்ல முடியுமா? சனாதன தர்மத்தில் ஆயிரம் நல்ல கருத்துக்கள் இருந்தாலும், அடிப்படை கருத்து தவறாக இருக்கிறது. பிறப்பால் ஒருவர் உயர்வு, தாழ்வு என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது எல்லோரும் எழுப்பும் கேள்வி.
மனுசுருதிக்கு ஆதரவா? இல்லையா? என்ற கேள்விக்கு நேரடி பதில் இல்லை. சாதி வேற்றுமையில்லை என மத்திய அரசு சட்டம் இயற்ற முடியுமா? சனாதனம் ஆயிரம் ஆண்டாக நடக்கும் கருத்து யுத்தம். இது தொடரும். தமிழகத்தில் சாதி வேற்றுமையில்லை. சாதியை சொல்லி பதவிக்கு யாரும் வர முடியாது. பெரியார் நடத்திய யுத்தம் காரணமாக இன்றைக்கு எல்லோருக்கும் சம தர்மம் கிடைத்துள்ளது. வரலாறு என்பது சில உண்மையும், பொய்யும் கலந்து எழுதப்படுவது. இந்தியா உலகம் முழுவதும் அறிந்த பெயர். ஆனால் பாரத் என்ற பெயரும் பயன்படுத்தப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான கூட்டணி இண்டியா என பெயர் வைத்ததால் பாரத் என பெயர் மாற்ற அடிப்படை காரணம். புதிதாக தேர்ந்தெடுக்கும் அரசு 5 ஆண்டு இருக்க வேண்டும். குழப்பம் ஏற்படுத்தவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொண்டு வர முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு பிரதமர் மோடி குறள் சொல்கிறார். அவர் தமிழ் மொழியை வளர்க்க ஒன்றும் செய்யவில்லை. சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.