நீலகிரி: பசு மாட்டின் உடலில் விஷம் தடவி புலிகள் கொல்லப்பட்டதா? – 20 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் இறந்துக்கிடப்பதாக உள்ளூர் மக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், அவலாஞ்சி அணையின் உபரிநீர் தேங்கும் நீர்நிலையில் ஒரு புலியும் அதன் அருகிலேயே புதருக்குள் மற்றொரு புலியும் இறந்துக்கிடப்பதை உறுதி செய்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து புலிகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

புலியின் உடல்

இறந்த புலிகளின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தலைமை வன பாதுகாவலர் மேற்பார்வையில் முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் உட்பட 5 கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் புலிகளின் உடலை கூறாய்வு செய்தனர். புலிகளின் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இரண்டு புலிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி வனத்துறை அதிகாரிகள், “3 மற்றும் 8 வயதுடைய இரண்டு ஆண் புலிகள் இறந்துள்ளன. ஒரு புலியின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்தாலும், மற்றொரு புலியின் உடலில் எந்த காயமும் இல்லை. இவை இறந்துகிடந்த பகுதியில் அழகிய நிலையில் பசு மாட்டின் உடல் கிடந்ததைக் கண்டறிந்தோம்.

கூறாய்வு

இறந்த பசுமாட்டின் உடலில் விஷம் தடவி புலிகளை கொன்றிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இறந்து கிடந்த பசுமாட்டின் உடல் பாகங்களையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டு வருகிறோம். கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ” என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.