கமலின் ‘KH 233’ படத்தின் முன்னோட்ட வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சியில் இருக்கிறது படத்தின் டீம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் அதன் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்து விசாரித்தோம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ வசூலில் சாதனைப் படைத்தது. அதனையடுத்து கமலை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ‘விக்ரம்’ படத்திற்கு முன்பே, கமல் ‘இந்தியன் 2’வில் நடித்து வந்தார். அதனை லைகா தயாரிக்கிறது. இதற்கிடையே லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ பாகங்கள் அடுத்தடுத்து பெரும் வெற்றி பெற்றதில், கமல் – மணிரத்னம் கூட்டணி வைத்தும் ஒரு படம் இயக்க விரும்பினார்கள்.
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு கமலை மணிரத்னம்தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித்தின் ‘துணிவு’ படத்தை இயக்கி முடித்த அ.வினோத் சொன்ன கதையும் கமலுக்கு ரொம்பவே பிடித்துப் போனதில், வினோத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார். முதலில் வினோத் படத்தை ஆரம்பித்துவிட நினைத்தனர்.

இது கமலின் 233வது படமாகும். ‘விக்ரம்’ படத்தை விட அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகவிருக்கிறது. ‘விக்ரம்’ படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி என மல்டி ஸ்டார்கள் இணைந்து நடித்தது போல, இதிலும் மல்டி ஸ்டார்கள் கூட்டணி உருவாகிறது. யாரும் எதிர்பார்த்திடாத இரண்டு பெரிய ஸ்டார்கள் படத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். மிலிட்டரி பின்னணியில் நடக்கும் கதை இது என்றும், பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ‘இந்தியன் 2’வில் இளமையான கமல் இருக்கிறார் என்ற சர்ப்ரைஸ் போல, இதில் கமலின் தோற்றம் பேசப்படும் எனவும் தகவல். விரைவில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. எனவே, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ‘KH 233’ படப்பிடிப்பு தொடங்கலாம் எனத் தெரிகிறது.