Dunith Wellalage: `என்னங்க மேஜிக் பண்றீங்க…' இந்தியாவைத் திணறடித்த துனித் வெல்லாலகே யார்?

ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்புவிலுள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Dunith Wellalage | துனித் வெல்லாலகே

இதில் இலங்கை அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லாலகே, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய சுழற்பந்து வீச்சில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வீழ்ந்தனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த துனித் வெல்லாலகே யார்?

Dunith Wellalage Bowling

20 வயதே நிரம்பிய இளம் சுழற்பந்து வீச்சாளரான இவர், 1 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். 2022-ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர், அதற்கு முன்பு 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெல்லாலகே, இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

மேலும் அந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் எடுத்து, இலங்கை அணி வெற்றி பெற உதவினார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில், சதம் அடித்த இலங்கை அணியின் முதல் கேப்டன் இவரே ஆவார். அந்தத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெல்லாலகே, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இவருடைய பந்து வீச்சின் சராசரி 13.58. மேலும் இவர் அத்தொடரில் 264 ரன்களைக் குவித்து இலங்கை அணியின் சார்பாக அதிக ரன்களை எடுத்த வீரராகவும் திகழ்ந்தார்.

Dunith Wellalage | துனித் வெல்லாலகே

முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் மற்றும் அகிலா தனஞ்ஜெயாவிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது இலங்கை பௌலரானார் துனித் வெல்லாலகே.

Dunith Wellalage | துனித் வெல்லாலகே

அஜந்தா மெண்டிஸின் நிழல் என்று கருதப்படும் துனித் வெல்லாலகே இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக கணிக்கப்படுகிறார். தற்போது ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இவர், இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.