திருவனந்தபுரம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடர்பாக, கேரள சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்தது.
கேரளாவில், மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்க, ‘கெல்ட்ரான்’ எனப்படும் கேரள மாநில மின்னணு வளர்ச்சி வாரியத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இது போன்ற கேமராக்கள் தயாரிக்கும் வசதி அந்த நிறுவனத்துக்கு இல்லை. மேலும் கேமராக்கள் கொள்முதலில் ஊழல் நடப்பதாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சட்டசபையில் நேற்று இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
”செயற்கை நுண்ணறிவு கேமராக்களை, கெல்ட்ரான் நிறுவனம் தயாரிப்பதில்லை. அப்படி இருக்கையில் எப்படி இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது,” என, காங்.,கின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி ராஜு, தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
மாநில அரசின் பொதுத் துறை நிறுவனத்தின் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நிறுவனம், சந்திரயான் – ௩, ஆதித்யா விண்கலங்களுக்கான பாகங்களை வடிவமைத்து கொடுத்துள்ளது.
கடந்த காங்., தலைமையிலான ஆட்சியில், ராதாகிருஷ்ணன் உள்துறை அமைச்சராக இருந்தபோது, சிசிடிவி கேமராக்கள் இந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு கேமராவின் விலையைவிட அதிக விலைக்கு வாங்கியுள்ளனர். பொறுப்பற்ற முறையில், நியாயமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்