கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் கடந்த 30-ம் தேதி இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் நிபா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். வெளவால்களின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றின் மூலம் நிபா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வெளவால்கள் வசிப்பிடத்துக்கு செல்லவோ, அவற்றை அங்கிருந்து விரட்டவோ முயல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் இருந்து ஐந்து சாம்பிள்கள் புனே-வுக்கு அனுப்பப்பட்டன. சிகிச்சையில் உள்ள 9 வயது சிறுவனுக்கும், இறந்தவரின் மனைவியின் சகோதரனுக்கும் பாசிட்டிவ் ஆகி உள்ளது. இறந்தவரின் 4 வயது மகளுக்கும், சகோதரின் 10 மாதம் ஆன குழந்தைக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் போலீஸ் உதவியுடன் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 127 பேர் மருத்துவப் பணியாளர்கள். இதுவரை நான்குபேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜில் பி.எஸ்.எல் லெவல் 2 லேப் உள்ளது. அதுபோல ஆலப்புழாவிலும் பரிசோதனை செய்ய முடியும்.
நிபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். ஐ.சி.எம்.ஆர் மூலம் தேவையான மருந்துகள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.ஐ.வி புனே டீம் மற்றும் வெளவால்கள் குறித்து பரிசோதிக்கும் டீம் கோழிக்கோட்டுக்கு வர உள்ளது” என்றார்.

தமிழக எல்லையோர மாவட்டமான திருவனந்தபுரத்தில் நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் அலர்ட் ஆகி உள்ளது.
கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பிரின்ஸ் பயாஸிடம் நிபா வைரஸுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டோம்.
“நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீட்டிங் நடந்தது. அதில் நானும் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், உள்ளாட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டோம்.
கன்னியாகுமரி – கேரளா எல்லையில் உள்ள களியக்காவிளை, கோழிவிளை, கொல்லங்கோடு, பளுகல், நெட்டா ஆகிய 5 செக்போஸ்ட்களிலும் லோக்கல் ஹெல்த் இன்ஸ்பெக்டர் தலைமையில் நிபா அறிகுறிகளுடன் வருபவர்கள் குறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளுடன் யாராவது வந்தால் அவர்களை அந்த இடத்தில் வைத்தே பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சைக்கு என தனி வார்டு ஏற்படுத்தி எட்டு படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்துள்ளோம்’’ என்றவர் நிபா வைரஸ் பற்றி விளக்கினார்.

’’வெளவால் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. வெளவால் கடித்த பழங்களைச் சாப்பிடக்கூடாது. சில பகுதிகளில் பன்றிகளாலும் பரவுகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. கொரோனா வைரஸ் போன்று இது காற்றின் மூலம் பரவாது. நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் வியர்வை உள்ளிட்ட உடல் திரவங்கள், மற்றொருவரது உடலில் பட்டால் பரவும். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது எச்சில் மற்றவர் மீது பட்டாலும் பரவும்.
நிபா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நிபா பாதித்தால் மரணமடையும் வாய்ப்பு 40% – 70% வரை உள்ளது. காய்ச்சல், தலைவலி, இருமல், உடல்வலி, குமட்டல், வாந்தி போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகும். அடுத்த கட்டமாக மூளை பாதிக்கப்படும். மூளைக்காய்ச்சல் போன்று அறிகுறிகள் தென்படும். அவர்களது ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்துதான் நிபா பாதிப்பை உறுதி செய்ய முடியும்.

காய்ச்சல் ஏற்படும் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பா என பரிசோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ, காய்ச்சல் ஏற்பட்டு அவர்களது மூளை பாதித்தது போன்று நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டாலோ பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அணில், வெளவால் போன்றவை கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. நல்ல, சேதாரமில்லாத பழங்களையும் நன்றாகக் கழுவிச் சாப்பிடுவது நல்லது. மாஸ்க் அணிய வேண்டும். நிபா பாதித்தவர்களின் உடலில் உள்ள திரவங்கள் மற்றவர்கள் உடலில் பட்டாலும் அந்நோய் பரவும் என்பதால், கேரளாவில் இருந்து வந்த யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர்.