டிரைவிங் லைசென்ஸ்: அரசு பதிலளிக்க உத்தரவு| Driving License: Government Response Order

புதுடில்லி, இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான, ‘டிரைவிங் லைசென்ஸ்’ வைத்துள்ளவர்கள், குறிப்பிட்ட எடையுள்ள இலகு ரக மோட்டார் வாகன பிரிவில் உள்ள வர்த்தக பயன்பாட்டு வாகனத்தை ஓட்டலாமா என்ற விவகாரத்தில் சட்ட திருத்தம் தேவைப்படுகிறதா என்பது குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.

ஒரு வழக்கில், 2017ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 7,500 கிலோ வரை எடையுள்ள பயணியர் வாகனங்கள், இலகுரக மோட்டார் வாகனம் என்பதற்கான வரையறையில் இருந்து நீக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துகளில் காப்பீடு வழங்குவது உள்ளிட்டவற்றில் குழப்பம் உள்ளதாக, 76 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, கடந்தாண்டில் இருந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையின்போது அமர்வு கூறியுள்ளதாவது:

இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான லைசென்ஸ் பெற்றவர்கள், குறிப்பிட்ட எடையுள்ள இலகு ரக மோட்டார் வாகன பிரிவில் உள்ள வர்த்தக பயன்பாட்டு வாகனத்தை ஓட்டலாமா என்பது ஒரு கொள்கை முடிவாகவே இருக்க முடியும். இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மக்களின் பாதுகாப்பு, காப்பீட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தன் பதில் மனுவை மத்திய அரசு இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்டம் தொடர்பானது அல்ல. இருப்பினும், மத்திய அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடக்கும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.