அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் – இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பல முனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் உள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்குகுடியரசு கட்சியினரின் ஆதரவை பெற தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த விவேக் ராமசாமி, தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களை மூடுவதோடு, 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்றும் கூறினார்.

எப்.பி.ஐ. என்று அழைக்கப்படும் மத்திய புலனாய் அமைப்பு, கல்வித்துறை, மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளதாகவும், 4 ஆண்டு பதவி காலத்துக்குள் 22 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் அரசு பணியாளர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதத்தை குறைப்பதே தனது இறுதி இலக்காக இருக்கும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.