நாடு முழுவதும் 53 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பு குறித்து விசாரணை

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த விசாரணையின் தொடர்ச்சியாக, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 53 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கனடாவில் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை இந்திய முகவர்கள் கொன்றதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சட்டவிரோத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதில், சில சமூகவிரோத கும்பலை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தொழிலதிபர்கள், பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபடுவதும், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல் மூலம் திரட்டப்படும் நிதியை இந்தியா மற்றும் கனடாவில் வன்முறை செயல்களுக்கு பயன்படுத்துவதும் தெரியவந்தது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த கும்பல் செயல்பட்டு வருகிறது. கனடாவில் சொகுசு படகுகள், திரைப்படத் துறையில் அதிக அளவில் இவர்கள் முதலீடு செய்துள்ளதையும் என்ஐஏ கண்டறிந்தது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் 43 காலிஸ்தான் தாதாக்களின் புகைப்படங்களை என்ஐஏகடந்த 20-ம் தேதி வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக பஞ்சாப், டெல்லி,ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் சண்டிகரில் மொத்தம் 53 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், சந்தேகத்துக்குரிய பலரை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது, ‘‘குறிப்பிட்ட நபர்களை திட்டமிட்டு கொலைசெய்வது, அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்துவது, அச்சுறுத்தி பணம் பறிப்பது, ஆயுதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் காலிஸ்தான் ஆதரவாளர்களும், தாதாக்களும் ஈடுபட்டு வருகின்றனர். கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களது வலையமைப்பை உடைப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. தீவிரவாதி அர்ஷ் தல்லா தவிர லாரன்ஸ் பிஷ்னோய்,சுகா துனேகே உள்ளிட்ட தாதாக்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்தது’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.