சமவேலைக்கு சம ஊதியம்… பணி நிரந்தரம்… பணி நியமனம்… இந்த மூன்று கோரிக்கைகளை மையமாக வைத்து, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் என மூன்று வகையான ஆசிரியர்கள் சங்கத்தினர், தங்கள் குடும்பத்தினருடன் போராடி வந்தனர்.

ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்துக்கு அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் போராட்டக் களத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடந்து வந்தனர்.
இந்த நிலையில்தான், போராட்டக்களத்தில் இருந்த ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸார், அவர்களைக் கைதுசெய்து பல்வேறு இடங்களில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க ஐ.டி விங்கின் அதிகாரபூர்வமான ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்தும் இந்தக் குரல் யாருடையது?” என தலைப்பிட்டு, அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முழுநேர ஆசிரியர்களின் போராட்டத்தின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதை பதிவு செய்திருக்கின்றனர். அந்த ஆடியோவில், முழுநேர ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து எடப்பாடி பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான ஐ.டி விங் பக்கத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, ‘தேர்தல் சமயத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்ன?’ என்பது குறித்து, “ஆசிரியர்களை நம்பவைத்து ஏமாற்றும் இந்தக் குரல் யாருடையது?” என்று ஆடியோவைப் பதிவு செய்திருக்கின்றனர். மேலும் அதில், “மாதம் ரூ.10,000/- சம்பளம் வாங்கும் இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உரிமை வேண்டி நடத்திய போராட்டத்தை மறைக்க, மடைமாற்ற, அவர்களின் வலியை உணராமல், மாதம் ரூ.80,000/- சம்பளம் வாங்கும் முழுநேர ஆசிரியர்களின் போராட்டம் குறித்த ஒலிப்பதிவை எடுத்து வெளியிட்டு திசை திருப்ப நினைப்பது வெட்கக்கேடானது.
இவ்வாறு இந்தப் போராட்டத்தை திசை திருப்பாமல், நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 311, 181-ன் படி ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதையும் பணி நிரந்தரம் என்பதையும் விரைந்து நிறைவேற்றுக” என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவை முன்வைத்து தி.மு.க – அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.