புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, 5 மாநில சட்டப்பேரைவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின் முதல் கூட்டம் ஹைதராபாத்தில் கடந்தமாதம் 16-ம் தேதி நடைபெற்றது. இதில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தற்போதைய அரசியல் நிலவரம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்றவேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்கவும், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உரிமைகள் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.