பாலக்காடு:மத்தியபிரதேசம், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உட்பட, 11 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த உள்ள, டிஜிட்டல் ரீதியாக பயிர் கணக்கெடுப்பு திட்ட செலவில், 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கிறது. கேரளாவில் கணக்கெடுப்பிற்கான பயிற்சி துவங்கியுள்ளது.
இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாயம் மிகுந்த மாவட்டங்களில், பாசன நிலங்களின் சராசரி அளவு, பயிர்கள், ஒவ்வொன்றின் சராசரி மகசூல், அதிகபட்ச மகசூல், சாகுபடி செலவு மற்றும் விற்பனை முறை ஆகியவற்றின் மொத்த தகவல், இக்கணக்கெடுப்பில் எடுக்கப்படுகிறது.
இதனால், டிஜிட்டல் டேட்டா அடிப்படையில், மானியங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பலன்களை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. மத்திய வானிலை பயிர் காப்பீட்டு நடவடிக்கைகளுக்கும் இது கைகொடுக்கும்.
பல்வேறு பருவகால பயிர்களின் தெளிவான மதிப்பீட்டையும், விளைச்சல் மற்றும் சாகுபடி பரப்பின் தற்போதைய நிலையையும் இந்த கணக்கெடுப்பு உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிமோட் சென்சார், ட்ரோன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கேரளாவில், பாலக்காடு, வயநாடு, ஆலப்புழை மாவட்டங்களில் உள்ள, 299 கிராமங்களில் முதல் கட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதற்காக, தொழிற்கல்வி மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களை, வருவாய் சர்வே மற்றும் நில ஆவணங்கள் துறையின் உதவியுடன் சர்வேயர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
நெல், தென்னை, மிளகு, பாக்கு, மரவள்ளிக்கிழங்கு, சிறுதானியங்கள், பலா, மா, வாழை, ஜாதிக்காய், இஞ்சி, மஞ்சள், காய்கறிகள் குறித்து இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த டேட்டா வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின், வேளாண் அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்