எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங்கை அமலாக்கத்துறை கடந்த 4-ந் தேதி கைது செய்தது. இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில், முதலில், பஸ் வாங்கியதில் ஊழல் என்று கூறினர். வகுப்பறை கட்டியதில் ஊழல், மின்சார ஊழல், சாலை போடுவதில் ஊழல், குடிநீர் வினியோகத்தில் ஊழல் என்று கூறினர். ஆனால் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. மதுபான ஊழலும் புனையப்பட்ட வழக்குதான். இதில், பண பரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை. இவ்வழக்கிலும் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன், வேறு ஒரு ஊழலை கொண்டு வருவார்கள்.

விசாரணை அமைப்புகளிடம் கோர்ட்டில் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பா.ஜனதாவின் நோக்கம், எதிர்க்கட்சிகளை விசாரணை அமைப்புகளிடம் மாட்டி விடுவதுதான். அவர்களும் வேலை செய்யமாட்டார்கள். மற்றவர்களையும் வேலை செய்யவிடமாட்டார்கள். எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் அடக்கவும், அச்சுறுத்தவும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. கட்சிகளை உடைத்து பா.ஜனதாவில் ஆட்களை சேர்க்கிறார்கள். இது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்களும் குறிவைக்கப்படுகிறார்கள். அரசியலில் மட்டுமின்றி, தொழில் மற்றும் வர்த்தக துறைகளிலும் பீதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இப்படி இருந்தால் நாடு முன்னேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.