டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தி உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இளைஞரும் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு சாலைகளில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதோடு, ஏவுகணைகளைக் கொண்டும் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.