உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு கிரிக்கெட் அணிகளுக்கும் இடையே நடைபெறும் 150வது ஒருநாள் போட்டி இதுவாகும். இரு அணிகளில் ஆஸ்திரேலியா அணி 5 முறையும், இந்திய அணி 2 முறையும் உலக கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. இந்த முறையும் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களம் காண இருக்கின்றன. இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அவர் அணியில் இருந்து விலகினால் கே.எல்.ராகுல் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது. மாறாக, அஸ்வினை ஓப்பனிங் இறக்கவும் கேப்டன் ரோகித் சர்மா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் இப்படியான பரீட்சாத்த முயற்சியை இந்தியஅணி எடுக்குமா? என்ற கேள்வியும் இருக்கிறது. சுப்மான் கில்லைப் பொறுத்தவரை அவர் இப்போது நல்ல பார்மில் இருக்கிறார். அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்கூட சதமடித்திருந்தார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அவருக்கு மாற்று வீரராக இருப்பவர்களும் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணி தைரியமாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை பயிற்சி ஆட்டங்கள் எல்லாம் மழையால் பாதிக்கப்பட்டதால்,இந்தியா விளையாடும் இன்றைய போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், வானிலை தகவலின்படி ஒரு விழுக்காட்டுக்கு கூட மழை அச்சுறுத்தல் இல்லை. இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறருக்கிறது. லீக் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் என்பது பெரும்பாலான முன்னாள் வீரர்களின் கணிப்பாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், ரிக்கி பாண்டிங், முத்தையா முரளிதரன், சேவாக், கவுதம் காம்பீர், யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் என்றும், கோப்பையை வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.