அமெரிக்கா அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை சார்பில் ஆண்டுதோறும், ஐ.வி.எல்.எப்., எனும் சர்வதேச பார்வையாளர் தலைமை திட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, தலைமைப் பண்பு கொண்ட பிரமுகர்களை அமெரிக்கக் குழு தேர்வு செய்து, தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லும். அங்கு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, இரு நாடுகளின் கலாசாரம் சார்ந்த விஷயங்களை பரிமாறிக் கொள்வர்.
வாஜ்பாய், மோடி
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பல இந்தியத் தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் இருந்து, பெங்களூரு காடுகோடி அருகே உள்ள சீகேஹள்ளி கிராம பஞ்சாயத்து பா.ஜ., உறுப்பினர் சம்பத் ராமானுஜம், அமெரிக்கா துாதரக அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டார். இவர், தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.
அமெரிக்க அரசின் ஏற்பாட்டில் அந்நாட்டுக்குச் சென்று, 82வது சர்வதேச பார்வையாளர் தலைமைத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பினார். ‘இளம் அரசியல்வாதிகள் – இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் அவர் பேசினார்.
அன்பு மழையில் திளைப்பு
இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் குறித்து பெருமையுடன் விளக்கினார். சில வீடுகளுக்கும் சிறப்பு அழைப்பாளராகச் சென்றார். அவர்களின் அன்பு மழையில் திளைத்தார்.
இந்தியாவும், அமெரிக்கவும் ஜனநாயக நாடுகள் என்பதால், இரு நாடுகளின் அரசியல், இளைஞர்களின் எதிர்காலம் என பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
வாஷிங்டன், டெட்ராய்ட், டெஸ் மொய்ன்ஸ், சான் ஆன்டோனியோ, ஆஸ்டின், டல்லாஸ் போன்ற நகரங்களில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் தமிழர் என்று அறிந்ததும், ‘வாஷிங்டன் தமிழ்ச் சங்கம்’ உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் அழைத்துப் பாராட்டு விழா நடத்தின.
மறக்க முடியாத நிகழ்வு
அமெரிக்காவின் அயோவா மாநில பிரதிநிதிகள் சபைக்குச் சென்றபோது, சம்பத் ராமானுஜம் என்ற பெயரை சொன்னதும், மொத்த உறுப்பினர்கள் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தினர். ‘இந்த தருணம் தன் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு’ என்று அவர் இப்போதும் பெருமையாக கூறுகிறார்.
தற்போது பார்லிமென்ட் நிகழ்வுகள் எப்படி நடக்கிறதோ, அதே போன்று நடத்தி ஜனநாயகம் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்க, சம்பத் ராமானுஜத்தை அமெரிக்காவின் உள்துறை தேர்வு செய்துள்ளது.
இதற்காக பெங்களூரில் 1,000 கல்லுாரி மாணவர்களுக்கு பார்லிமென்ட் நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க ஆயத்தமாகி வருகிறார். இப்பயிற்சியின் இறுதியாக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படவர். இவர்கள் மூலம் 2024 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று பெரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளார்.
இவர், மஹாதேவபுரா சட்டசபை தொகுதி பா.ஜ., சமூக வலைதள பிரிவு முக்கியஸ்தராகவும் செயல்படுகிறார். கர்நாடக அரசியலில் சாதனை படைக்க ஆர்வமுடன் இருக்கிறார். கர்நாடக தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என சபதம் செய்து உள்ளார்.
தமிழர்கள் ஒன்று பட்டு, அவருக்கு ஒத்துழைப்பு அளித்தால், கர்நாடகாவில் சாதனை எளிதாகும் என்பதில் ஐயமில்லை. [email protected] என்ற இ – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்களுக்கு உதவி
பிரபல நிறுவனத்தில் மென்பொறியாளராக கை நிறைய சம்பளம் வாங்கி வந்த இவர், ஏழைகள் படும் கஷ்டத்தைப் பார்த்து, பணியைத் துறந்தார். தன் மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து ‘அன்வயா’ என்ற அறக்கட்டளை நிறுவி, நுாற்றுக்கணக்கான மாணவ – மாணவியருக்கு உதவி வருகின்றனர்.
மேலும், சீகேஹள்ளி பகுதியில் பாய்ந்தோடும் தட்சிண பினாக்கினி ஆற்றங்கரை ஓரத்தில் தடுப்பு வேலி அமைத்து அழகாக்கி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்