ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடி உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது கோலி – ராகுல் இணை.
இன்னும் அப்படியே அந்த இன்னிங்ஸ் ஞாபகமிருக்கிறது. இந்தியாவில் நடந்த 2011 உலகக்கோப்பையின் முதல் போட்டி அது. கோலிக்கு வெறும் 22 வயது தான். வங்கதேசத்துக்கு எதிராக சேவாக் வெறியாட்டம் ஆட இன்னொரு முனையில் கோலி இளமை துடிப்புடன் ஆடி ஒரு சதம் அடித்திருப்பார். கோலியின் சிறப்பான இன்னிங்ஸூடன் தொடங்கிய தொடரின் முடிவில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. காலச்சக்கரம் சுழல்கிறது. 12 ஆண்டுகள் கடந்து உலகக்கோப்பை மீண்டும் இந்தியாவில் நடக்கிறது. இப்போதும் இந்தியாவிற்கான முதல் போட்டியில் கோலி ஆடுகிறார். அப்போதைக்கும் இப்போதைக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். அங்கே 2011 இல் இந்தியாவின் எதிராளி வங்கதேசம்தான். ஆனால், இங்கே ஆஸ்திரேலியா. அங்கே பெரிதாக எந்த சிக்கலான சூழலும் இல்லை. தடையற்ற நதிபோல பாய்ந்து செல்ல முடிந்தது. ஆனால், இங்கே அப்படியில்லை. என்னவெல்லாம் சவால் இருக்குமோ என்னவெல்லாம் சிக்கல் இருக்குமோ எல்லாமோ இருந்தது. இரண்டுமே முற்றிலும் வேறு வேறான சூழல். கோலியுமே கூட இப்போது வேறாக இருந்தார். 2011 இல் இளம்புயல். இப்போது அணியின் சூப்பர் சீனியர்!

ஆஸ்திரேலியாவிற்கு டாப் ஆர்டர் மொத்தமும் வீழ்ந்தது என்னவோ இந்தியா எதிர்கொள்ளாத புதிய பிரச்னையெல்லாம் இல்லை. 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக டாப் ஆர்டர் இப்படித்தான் சீட்டுக்கட்டாய் விழுந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஞாபகமிருக்கிறதா? அதிலும் அப்படித்தான். சமீபத்தில் ஆசியக்கோப்பையில் மழையால் கைவிடப்பட்ட போட்டியில் ஷாகின் ஷா அப்ரிடியிடம் பதில் பேச முடியாமல் இந்திய வீரர்களின் பேட்டுகள் தலைகுனிந்ததே? ஆக, இப்படி டாப் ஆர்டர்கள் சொதப்புவதோ அந்த சொதப்பலின் மூலம் இந்தியா வீழ்வதோ புதிய கதையெல்லாம் அல்ல. ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி அப்படி வீழ்ந்திருந்தால் இந்திய அணி மொத்தமாக உடைந்திருக்கும். ஏனெனில், இது உலகக்கோபையின் முதல் போட்டி. இன்னும் 8 லீக் போட்டிகளில் இந்திய அணி ஆடியாக வேண்டும். அந்த 8 போட்டிகளுக்குமான ஊக்கத்தையும் தெம்பையும் இங்கிருந்துதான் எடுத்து செல்ல வேண்டும். அப்படியொரு இக்கட்டான சூழலில்தான் இந்திய அணிக்காக அதி முக்கிய இன்னிங்ஸை ஆடி கொடுத்திருக்கிறார்கள் கோலியும் ராகுலும்.
2 ஓவர்கள் முடிவில் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. சேப்பாக்கம் மைதானமே நிசப்தமாக இருந்தது. முன்பு பார்த்த அதே சொதப்பல்களைத்தான் மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற அச்சம் அத்தனை பேர் மனதிலும் இருந்தது.
ஆனால், களத்தில் கோலியும் இருந்தார் என்பதை மறக்க முடியாது. அடுத்த சில ஓவர்களுக்கு ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதை போலவே இருந்தது. இரண்டு ஸ்லிப்களை வைத்திருந்தார் பேட் கம்மின்ஸ் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கோலியை கவர் ட்ரைவ்க்கு இழுத்து ஆட்டமிழக்க செய்ய ஸ்டார்க் முயல்கிறார். கோலி சில பந்துகளை அவரே பக்குவமாக லெஃப்ட் செய்தார். சில பந்துகள் கோலியின் பேட்டை ஏமாற்றி அவரை பீட்டன் ஆக்கின. நிறைய டாட்கள் ஆடினார். 30 பந்துகளுக்கு மேல் ஆடியும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 50 க்கும் கீழ்தான் இருந்தது. கோலியின் ஸ்ட்ரைக் ரேட் ஒவ்வொரு டெலிவரிக்குப் பிறகும் கோலியும் ஸ்டார்க்கும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அப்படியே டெஸ்ட் மேட்ச்சுக்கான சித்திரமாகத் தோன்றியது. இடையில் ஹேசல்வுட்டின் ஷார்ட் பாலைத் தூக்கியடிக்க முயன்று பந்தை காற்றில் பறக்கவிட்டார் கோலி. பந்து அந்தரத்தில் நின்ற அந்த 2-3 நொடிகள் ஒட்டுமொத்த மைதானமுமே உறைந்து நின்றது. மிட்விக்கெட்டில் இருந்து ஓடிவந்த மார்ஸ் அந்த கேட்ச்சை விட்ட மாத்திரத்தில் ரசிகர்கள் வெளிப்படுத்திய ஆசுவாச மூச்சே ஒரு பெரும் சத்தமாக ஒலித்தது. ‘உலகக்கோப்பையை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டமும் கடவுளின் கருணையும் வேண்டும்.’ என ரோஹித் இந்தப் போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம்தான் அந்த கேட்ச் ட்ராப் என பெவிலியனில் இருந்த ரோஹித் சர்மா நினைத்திருக்கக்கூடும்..

எதிராளியின் தாக்குதல்களை தாங்கிக் கொண்டு அசராமல் தற்காத்து நிற்பதுதான் எதிர்த்து அடிப்பதற்கான முதல் தகுதி. கோலி அதைத்தான் இங்கே செய்தார். பெரும் வீழ்ச்சியைக் கண்முன் காட்டிய பௌலர்களுக்கு எதிராக முதலில் தற்காப்பைத்தான் கோலி கையில் எடுத்தார். சூழலை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். கிடைத்த அதிர்ஷ்டத்தின் அருமையை உணர்ந்துகொண்டார். கூடவே இன்னொரு முனையில் தொய்வில்லாமல் ராகுலும் தனது ஒத்துழைப்பை காட்டத் தொடங்கினார். வேறென்ன வேண்டும்? எதிர் தாக்குதலுக்கான நேரம் வந்தது. கோலி ஆட்டத்தைத் தொடங்கினார். நான்காவது வேகப்பந்து வீச்சாளரான க்ரீன் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள். `வேட்டையைத் தொடங்கிவிட்டேன்’ என கோலி அறிவித்த தருணம் அது. இதன்பின் ரன்கள் அப்படியே எந்தத் தடையும் இல்லாமல் வர தொடங்கின. கோலியும் ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் செய்ய ஆரம்பித்தார்.
இன்னொரு முனையில் ராகுல் ஆடிய ஆட்டத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கோலி தற்காப்பாக விக்கெட்டை காத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஓரளவுக்கு ரன்கள் சேர்ந்துகொண்டே இருக்க ராகுல்தான் காரணமாக இருந்தார். ஆட்டத்தின் திருப்புமுனையையும் கூட ராகுல்தான் உண்டாக்கினார். ஸ்கொயரில் எக்ஸ்ட்ரா கவரில் ஷார்ட் தேர்டு மேனில் என ஷம்பாவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார் ராகுல். இந்த 18 வது ஓவருக்குப் பிறகுதான் ஆட்டம் இந்தியா பக்கமே திரும்ப ஆரம்பித்தது. உலகக்கோப்பைக்கு முன்பாக ராகுல் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் இருந்தன. அவரின் அணுகுமுறை குறித்து அவரின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து என ஏகப்பட்ட விமர்சனங்கள். ஆனால், இந்தியாவுக்கு எப்போது தேவையோ அந்த சமயத்தில் சரியாக பெர்ஃபார்ம் செய்து கொடுத்திருக்கிறார்.

ரிஸ்க் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தாலே போதும் என்ற சூழலில் இருவரும் தங்களின் அனுபவத்தை வெளிக்காட்டும் வகையில் அற்புதமாக ஆடியிருந்தனர். இருவரும் அரைசதத்தைக் கடந்தனர். பார்ட்னர்ஷிப்பாக 150 ரன்களைக் கடந்தனர். கோலி சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார். இந்த சமயத்தில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஹேசல்வுட் மீண்டும் ஒரு ஷார்ட் பாலை வீச 85 ரன்களிலிருந்த கோலி புல் அடிக்க முயன்று மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனார். இந்த முறை அதிர்ஷ்டம் உதவவில்லை. அந்த கேட்ச் சரியாக கையில் சிக்கியிருந்தது. ஆனாலும் பரவாயில்லை. ஆட்டத்தை முழுமையாக இந்தியா பக்கம் கடத்திவிட்டார். இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நிசப்தத்தின் உச்சமாக இருந்த சேப்பாக்கம் மைதானம் இப்போது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. குழுமியிருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி கோலி…கோலி என முழங்கினர். கோலி சென்றாலும் ராகுல் ஓயவில்லை. கடைசி வரை நின்று சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான் பெவிலியன் திரும்பினார்.

1999 லிருந்து 2019 வரை எந்த உலகக்கோப்பையிலுமே ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் தோற்றதே இல்லை. அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை வீழ்த்திதான் இந்தியா இப்போது வென்றிருக்கிறது. தலைவணங்கி நிற்கும் சேப்பாக்க ரசிகர்களுக்கு மத்தியில் வெற்றிப்பயணத்தை தொடங்கியிருக்கும் இந்தியா பெரிதாக சாதிக்க வேண்டும்.