இஸ்லாமாபாத்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், நுாற்றுக்கணக்கான வீடுகள் மண் மேடாகின. பல்வேறு கிராமங்கள் முற்றிலும் அழிந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில், 2021 ஆகஸ்ட் முதல், தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். அந்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் தொகை உடைய நகரமாகவும் ஹெராத் விளங்குகிறது. இந்நிலையில், இந்த நகரின் வடமேற்கே நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை, முறையே, 6.3; 5.9 மற்றும் 5.5 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகின.
குலுங்கிய கட்டடங்கள்
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், ஹெராத் நகரில் இருந்த பல பெரிய கட்டடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள், அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணி, இரண்டாவது நாளாக நேற்று நடந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட பொது மக்கள், உபகரணங்கள் இல்லாததால், வெறும் கைகளில் கட்டட இடிபாடுகளை அகற்றினர்.
ஹெராத் நகரில் நிலநடுக்கத்தால் நுாற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. மேலும், ஜெந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில், 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வரை, 250 பேர் பலியானதாகதகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, நேற்று 2,060 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மருத்துவ முகாம்கள்
ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிஉயிரிழந்திருக்கலாம் என்ப தால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று.
இது குறித்து, தலிபான் அரசின் தகவல் மற்றும் கலாசார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன் நேற்று கூறியதாவது:
பலி எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது. இதுவரை 2,060 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,300க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குளிர்கால உடைகள், போர்வைகள், தார்ப்பாய்கள் உள்ளிட்ட பொருட்களை, ‘யுனிசெப்’ அமைப்பு வழங்கியது. மேலும், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்