இயக்குநர் மகிழ் திருமேனியின் பிறந்த நாள் இன்று. புதுமுகங்கள் நடிப்பில் ‘முன்தினம் பார்த்தேனே’ என்ற Rom- Com படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மகிழ்திருமேனி.
அந்தப் படம் சரியாகப் போகாததில், த்ரில்லர் ஜானர் பக்கம் கவனம் செலுத்தினார். ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ என ஆக்ஷன் த்ரில்லரில் கவனம் ஈர்த்தார். இப்போது அஜித்தை வைத்து ‘விடாமுயற்சி’யை இயக்கி வருகிறார். 2010ல் இயக்குநராக அறிமுகமானவர், இந்த 13 ஆண்டுகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களையே இயக்கியிருக்கிறார்.

* இயக்குநர் கௌதம்மேனனிடம் ‘காக்க காக்க’ படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார் மகிழ். அவரின் தாக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக கௌதமின் படப்பாடலான ‘முன் தினம் பார்த்தேனே’ பாடல் வரியையே தன் முதல் பட டைட்டிலாக வைத்தார் மகிழ்.

* மகிழ், கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக சேர்ந்ததே சுவாரஸ்யமானது. அப்போது தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் படத்தொகுப்பு வேலைகள் எடிட்டர் சுரேஷ் அர்ஸிடம் போய்க் கொண்டிருந்தது. கௌதம் மேனன் ‘மின்னலே’ படத்தை முடித்துவிட்டார். அங்கே கௌதமை முதல் முறையாகச் சந்தித்து பேசியிருக்கிறார் மகிழ். அந்த சந்திப்பிலேயே இம்ப்ரஸ் ஆகிவிட்டார் கௌதம்மேனன். ‘ ‘மின்னலே’ இந்தி பண்றேன். அடுத்து சூர்யா சாரை வைத்து ஒரு படம் ஆரம்பிக்கிறேன். நீங்க இப்பவே வந்து ஜாயின் பண்ணுங்க’ எனச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன அந்த படம் தான் ‘காக்க காக்க’. ‘வேட்டையாடுவிளையாடு’ வரை வேலை செய்திருக்கிறார் மகிழ். அந்த படத்தின் தயாரிப்பாளர் எடுத்த படம் தான் ‘முன் தினம் பார்த்தேனே’.

* ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு டப்பிங் பேசியதன் மூலம் ஸ்கோர் செய்த மகிழ்திருமேனி, ஆர்யாவின் ‘டெடி’, விஜய்சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். கௌதம்மேனனிடம் உதவி இயக்குநராக இருப்பதற்கு முன்னர், செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் செல்வாவுடன் நட்பானார். ஒரு கட்டத்தில் மகிழை நடிக்க வைக்கவும் செல்வராகவன் விரும்ப, அதனை புன்முறுவலுடன் மறுத்தும் விட்டார் மகிழ்.
* ‘காக்க காக்க’ படத்தின் டைட்டில் வைப்பதற்கு முன்னால், கௌதம் மேனன் தன் உதவியாளர்களிடம் ‘பொருத்தமான தமிழ்த் தலைப்பு ஒன்று சொல்லுங்கள்’ என கேட்டிருக்கிறார். அப்போது மகிழ்திருமேனி ‘தடையற தாக்க’ என எழுதி கொடுத்தார். அந்த டைட்டில் கௌதமிற்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் விரும்பாத காரணத்தினால், ‘தடையற தாக்க’ பின்னர் ‘காக்க காக்க’ என மாறியது என்பார்கள்.

* பள்ளியில் படிக்கும் போதே, வகுப்பில் முதல் மாணவனாக இருப்பார். அம்பேத்கர், காந்தியின் சிந்தனைகளில் ஈர்த்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என விரும்பியிருக்கிறார். இன்னொரு கட்டத்தில் எழுத்தாளராக விரும்பினார். புத்தகப் ப்ரியர். நாவல்கள் அதிகம் வாசிப்பார். டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, செக்காவ் ஆகியோரும், தமிழில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, தி.ஜா. ஆகியோரின் எழுத்துக்களும் விரும்பி வாசிப்பார்.
* மகிழின் சினிமா கனவு அத்தனை எளிதில் நடந்துவிடவில்லை. ‘விடா முயற்சி’யின் பலனாகத்தான் உதவி இயக்குநராகவும் ஆனார். ஒவ்வொரு இயக்குநரின் அலுவலகத்துக்கும் படையெடுத்து, உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு பல வருடங்கள் போராடியிருக்கிறார். அப்படி ஒருமுறை கஸ்தூரி ராஜாவின் அலுவலகம் போன போது, செல்வராகவன் சார் ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார். படித்த அசிஸ்டென்ட்ஸ் வேண்டும் என அவர் விரும்பியதில், செல்வாவின் டீமில் மகிழும் இணைந்திருக்கிறார். கஸ்தூரி ராஜா இயக்கிய ‘காதல் சாதி’யின் தேனி ஷெட்யூல் படப்பிடிப்பிலும் வேலை செய்திருக்கிறார் மகிழ்.

* மகிழ் திருமேனிக்கு ‘காதல் சாதி’ மறக்க முடியாத படம். காரணம், பேராசிரியரும் நடிகருமான பெரியார் தாசன், மகிழுக்கு அட்வைஸ் ஒன்றை சொல்லியிருக்கிறார். ‘சினிமா என்கிற சதுரங்க வேட்டையில் சில காய்கள் வெட்டுப்படும். சில காய்கள் வெட்டுப்படாமலே தானாக வீழ்ந்துவிடும். ஆனால் நீ வெட்டும் படாமல் வீழ்ந்தும் விடாமல் இலக்கை அடைவாய்’ என்று மகிழை பார்த்துச் சொல்லியிருக்கிறார். அதை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார் மகிழ்.

* விறுவிறுப்பான திரைக்கதைக்காக கவனம் பெற்ற படம் ‘தடம்’, அருண்விஜய் நடித்திருந்தார். ஆனால், அந்தக் கதை ரெடியானவுடன், உதயநிதியிடம் தான் நடிக்கக் கேட்டார் மகிழ். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போகவே அருண் விஜய் உள்ளே வந்தார். மகிழ்திருமேனியுடன் எப்படியும் ஒரு படம் பண்ண வேண்டும் என உதயநிதி விரும்பியதாலே ‘கலகத் தலைவன்’ உருவானது.
* அஜித், த்ரிஷா நடிப்பில் மகிழ் இப்போது இயக்கி வரும் ‘விடா முயற்சி’யின் படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் படமாக்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் பின் துபாய் உள்பட சில நாடுகளில் படமாகிறது. தொடர்ந்து 50 நாட்கள் ஒரே கட்ட படப்பிடிப்பாக ‘விடா முயற்சி’யை இயக்கி வருகிறார் மகிழ் திருமேனி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகிழ் சார்!