“வன்முறை ஒருபோதும் தீர்வு தராது” – பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

புதுடெல்லி: இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘போர் நிறுத்தம் வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின்போது இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தையே சரியான தீர்வு என்று வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் கண்டிக்கிறது. இஸ்ரேலிய மக்களின் நியாயமான பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் அதேவேளையில் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை வழங்காது. எனவே, போர் நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மீதான ஹமாஸ் குழு தாக்குதலை “பயங்கரவாத தாக்குதல்கள்” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் எனவும் அறிவித்தார். தற்போது, பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சனிக்கிழமை முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் தகவல்: இஸ்ரேலின் தெற்குப் பகுதியின் பல இடங்களில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் ஹமாஸின் 500 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியேற்றம்: இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக பாலஸ்தீனம் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.